புளூம்பெர்க் அவதூறு வழக்கு: மே 22ல் வாய்மொழி வாதங்கள் விசாரணை

புளூம்பெர்க் அவதூறு வழக்கு: மே 22ல் வாய்மொழி வாதங்கள் விசாரணை

படம்: எஸ்பிஎச் மீடியா

17 Apr 2026 - 6:39 pm

1 mins read

புளூம்பெர்க் ஊடகத்திற்கு எதிரான அவதூறு வழக்கின் வாய்மொழி வாதங்களை உயர் நீதிமன்றம் மே மாதம் 22ஆம் தேதி விசாரிக்கும் என்று நீதிமன்றப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். சிஎன்ஏ ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.

வழக்கு விசாரணை இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. ஒரு வார விசாரணைக்குப் பிறகு, புதன்கிழமை (ஏப்ரல் 15) அது ஒத்திவைக்கப்பட்டது.

இருதரப்பும் நீதிமன்றத்தில் முன்வைத்த ஆதாரங்களைத் தொகுத்துக்கொடுக்க இறுதி வாதங்கள் உதவும். விசாரணை முடியும் முன்பு, நீதிபதி அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்பளிப்பதற்கு அவை வாய்ப்புகளை வழங்கும்.

நீதிமன்றம் வாதி, பிரதிவாதிகளிடம் வாதங்களை வாய்மொழியாகவோ எழுத்துபூர்வமாகவோ முன்வைக்குமாறு கோரமுடியும்.

உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் புளூம்பெர்க்கிற்கும் அதன் நிருபர் லோ டி வெய்க்கும் எதிராக 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்குத் தொடுத்திருந்தனர்.

சிங்கப்பூரில் இடம்பெறும் உயர்தர பங்களா பரிவர்த்தனைகள் குறித்து புளூம்பெர்க் ஊடகம் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சர்களின் பங்களா பரிவர்த்தனை பற்றிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரை தங்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் கூறி, திரு சண்முகமும் டாக்டர் டானும் வழக்குத் தொடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்
புளூம்பெர்க்விசாரணைஉயர் நீதிமன்றம்உள்துறை அமைச்சுகா சண்முகம்மனிதவள அமைச்சுடான் சீ லெங்