தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘புளூஎஸ்ஜி’ மின்சார கார்ப் பகிர்வுச் சேவை: ஆகஸ்ட் 8ல் முடிவுறும்

2 mins read
d422ce58-011f-4398-bc17-fb5fa1a8e86f
புளூஎஸ்ஜி புதிய தளத்தில் இயங்க எண்ணுகிறது. புதிய சேவையை 2026ல் தொடங்க அது திட்டமிடுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சார கார்ப் பகிர்வு நிறுவனமான புளூஎஸ்ஜியின் (BlueSG) செயல்பாடுகள் இம்மாதம் 8ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன.

நிறுவனம் அந்தத் தகவலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கணக்குகள் அனைத்தும் மாத இறுதிக்குள் சரிபார்க்கப்படும் என்றும் வரவுசெலவுகள் நிர்வகிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

மின்சார கார்ப் பகிர்வுச் சேவையை மேலும் சிறந்த முறையில் வழங்கப் பெரிய தளத்தில் இயங்கப்போவதாக புளூஎஸ்ஜி சொன்னது. சிங்கப்பூரில் அத்தகைய சேவைகளுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில் அதன் அறிவிப்பு வந்துள்ளது.

புதிய தளத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்ற கார்கள் அறிமுகப்படுத்தப்படும்; சேவைக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும்; தொழில்நுட்பமும் மேம்படுத்தப்படும் என்று புளூஎஸ்ஜி தெரிவித்தது.

புதிய சேவையை அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய தளத்தைப் பயன்படுத்துவோர் புதிய சேவை ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிகச் சலுகைகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது.

புதிய சேவை குறித்த மேல் விவரங்கள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று புளூஎஸ்ஜி கூறியது.

வாடிக்கையாளர்களின் கணக்குவழக்குகள் தொடர்பான விவகாரங்களைக் கையாளத் தனிப்பட்ட தளத்தை உருவாக்க அந்நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றியதாகச் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

உதவி தேவைப்படுவோர் சங்கத்தை நாடலாம். அவசரத் தொலைபேசி எண்: 6277-5100. இணையத்தள முகவரி: www.case.org.sg.

சிங்கப்பூரின் முதல் மின்சார கார்ப் பகிர்வுச் சேவையை 2017ஆம் ஆண்டில் புளூஎஸ்ஜி நிறுவனம் தொடங்கியது.

நிறுவனத்திடம் ஏறக்குறைய 1,000 மின்சார வாகனங்கள் உள்ளன. தீவு முழுதும் அதற்கு 1,500க்கும் மேற்பட்ட மின்னூட்ட முகப்புகளும் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்