ஆண்டிறுதியில் அறிமுகமாகவுள்ள புதிய கார் பகிர்வு சேவையைச் சோதிக்க பயனர்களைத் திரட்டும் புளூஎஸ்ஜி

ஆண்டிறுதியில் அறிமுகமாகவுள்ள புதிய கார் பகிர்வு சேவையைச் சோதிக்க பயனர்களைத் திரட்டும் புளூஎஸ்ஜி

2 mins read
6574355e-5a10-4d45-ba62-29cfe66524da
புளூஎஸ்ஜி, ‘ஃபிளெக்சர்’ எனும் புதிய சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது. - படம்: FLEXAR PTE LTD

ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லத் தேவையான கார் பகிர்வு சேவையை வழங்கும் புளூஎஸ்ஜி, ‘ஃபிளெக்சர்’ எனும் புதிய சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நிலையத்திலிருந்து கார் ஒன்றை எடுத்துக்கொண்டு, சிங்கப்பூரில் உள்ள மற்றோர் இடத்தில் காரை நிறுத்திவைத்துவிட்டு செல்லும் அதே பழைய நடைமுறையிலேயே இயங்கும்.

திங்கட்கிழமையன்று (மார்ச் 9), 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதிகாரபூர்வமாகத் தொடங்குவதற்கு முன்னதாக, ஆரம்பகட்ட சோதனையாளர்களைத் திரட்ட தனது பயனர்களை நிறுவனம் அணுகியது.

டெலிகிராமில் உள்ள புளூஎஸ்ஜி பயனர் குழுவில் பகிரப்பட்ட இந்த அழைப்பில், ஆர்வம் உள்ளவர்கள் ஒரு கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. தேர்வு செய்யப்படும் பயனர்கள் இந்த மேம்படுத்தப்பட்ட சேவையை முயற்சி செய்து தங்கள் கருத்துகளை வழங்கலாம்.

இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழிடம் பேசிய புளூஎஸ்ஜி செய்தித்தொடர்பாளர், இந்த நிலையில் நிறுவனம் ஒரு புதிய தளத்தில் சேவையைச் சோதித்துச் செம்மைப்படுத்தி வருவதாகக் கூறினார்.

இருப்பினும், இந்தச் சேவைக்கான கட்டணம், எத்தனை பயனர்கள் சோதனையில் சேர்க்கப்படுவார்கள் அல்லது எத்தனை வாகன நிலையங்கள் இருக்கும் என்பன போன்ற விவரங்களை அதிகாரபூர்வத் தொடக்கம் வரை வெளியிட செய்தித்தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

இந்தச் சோதனையில் சேருபவர்களுக்குப் புதிய வசதிகளை முன்கூட்டியே பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மற்றும் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில் வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கென உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழு மூலம் பயனர்கள் தங்கள் ஆலோசனைகளை நேரடியாக வழங்க முடியும்.

ஜனவரி 2026 முதல் மார்ச் 2026 வரை, புளூஎஸ்ஜி நிறுவனம் வாகனத் தொழில்நுட்ப வல்லுநர்கள், செயல்பாட்டு மேலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை முகவர்கள் போன்ற பணியிடங்களுக்காகப் பல்வேறு வேலைவாய்ப்புத் தளங்களில் ஆட்களைத் திரட்டி வருகிறது.

குறிப்புச் சொற்கள்