அடுத்த ஆண்டு மறுபடியும் சேவைகளை வழங்கவிருக்கும் நிலையில் புளூஎஸ்ஜி (BlueSG), தன்னிடம் இருந்த நூற்றுக்கணக்கான மின்சார வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளது.
பொதுவாகக் காணப்பட்ட புளூஎஸ்ஜியின் மூன்று கதவு கார்கள் செயல்பாட்டிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. அதன் ஐந்து கதவு கார்கள், பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் நிறுவனங்களிடம் விற்கப்பட்டுள்ளன.
பெரிய அளவில் மேம்பாடுகளைச் செய்வதற்கு வழிவகுக்க தங்களின் தற்போதைய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளப்போவதாக கார் பகிர்வுச் சேவைகளை வழங்கும் புளூஎஸ்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி அறிவித்தது. தற்போது புளூஎஸ்ஜி சேவைகளைப் பயன்படுத்தியோர்க்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட்டது.
தங்களிடம் இருந்த எல்லா வாகனங்களையும் அப்புறப்படுத்திவிட்டதாகவும் சேவைகளை மறுபடியும் தொடங்கத் தயாராய் இருப்பதாகவும் புளூஎஸ்ஜி தலைமை நிர்வாகி கீத் கீ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். மேல்விவரங்களை அவர் வழங்கவில்லை.
புளூஎஸ்ஜி சேவைகளை வழங்கத் தொடங்கியபோது இருவகை வாகனங்களைப் பயன்படுத்தி வந்தது. மூன்று கதவுகளைக் கொண்ட ‘புளூகார்’ வகை காரும் அதே காரின் நான்கு இருக்கை வடிவமும் 2017ல் புளூஎஸ்ஜி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்து வந்தது. ஐந்து கதவுகளைக் கொண்ட ‘ஓப்பெல் கோர்சா-இ’ (Opel Corsa-e) கார் சேவை 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
‘புளூகார்’ வகை கார்களை டிரைப்கார் பகிர்வு நிறுவனத்துக்கு விற்காமல் அழித்ததற்கான (scrap) காரணத்தை புளூஎஸ்ஜி தெரிவிக்கவில்லை. அதேவேளை, அந்த கார்கள் டிரைப்காருக்கு விற்கப்படுவதை நிலப் போக்குவரத்து ஆணையம் தடுத்ததாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் சொன்னார். புளூகார்கள், மின்சார வாகனப் பகிர்வுத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் எந்தக் காரணத்துக்காகவும் அவற்றுக்கான உரிமையை வேறு தரப்புக்கு மாற்ற முடியாமல் போனதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் விளக்கமளித்தது. மின்சார கார் வாடகை சேவைக்காக மட்டும் உரிமையை மாற்ற முடியும்.
நிலப் போக்குவரத்து ஆணையமும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் 2016ஆம் ஆண்டு மின்சார கார் வாடகை சேவை குறித்து அறிவித்தன. திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் மின்சார கார்களை இயக்க அன்றைய போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், பிரான்சின் பொல்லோர் குழுமத்தின்கீழ் செயல்பட்ட புளூஎஸ்ஜியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

