கடல் சார்ந்த எரிபொருள் எண்ணெய்யைச் சட்டவிரோதமாகக் கைமாற்றிய குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு ஆடவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
துவாஸ் கடல் பகுதிக்கு அருகே சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட படகு ஒன்றில் கடலோரக் காவல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, படகில் இருந்த ஊழியர்களில் சிலர் சட்டவிரோதமாக எரிபொருள் எண்ணெய்யைக் கைமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட படகை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், அதிலிருந்த ஐவரைத் தடுத்துவைத்தனர்.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அப்படகில் இருந்தோர் கடல் சார்ந்த எரிபொருள் எண்ணெய்யை நிறுவனத்துக்குத் தெரியாமல் $6,917க்கு வெளிநாட்டுப் படகில் இருப்போரிடம் கைமாற்றியதாகத் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தின்போது வெளிநாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூர்ப் படகில் வரி செலுத்தப்படாத 92 சிகரெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
சிங்கப்பூர்ப் படகிலிருந்து கைதுசெய்யப்பட்ட மூவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுவரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.