புதன்கிழமை (ஜூலை 1) அன்று புலாவ் உபின் தீவுக்கு அருகே சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தபோது கடலில் விழுந்ததாகக் கூறப்படும் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
‘8world’ என்ற சீனப் பத்திரிகையின்படி, இறந்தவரான ஹுவாங் லைமிங், ஒரு படகோட்டியாக இருந்தார் என்றும், அவர் ஓர் ஒப்பந்ததாரரின் சார்பாக புலாவ் உபின் தீவுக்கு கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
சரக்குகளை இறக்கி முடித்துவிட்டு படகின் முன்புறத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அவர் நிலைதடுமாறி கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் தண்ணீரில் இருந்த ஒரு பாறையில் அவரது தலை அடிபட்டு, அதன் மூலம் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார்.
91 லோயாங் வேயில் நடந்த சம்பவம் குறித்து தங்களுக்கு பிற்பகல் 2 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை ஏஷியாஒன்னிடம் தெரிவித்தன.
நீரில் இருந்து மீட்கப்பட்ட அந்த முதியவர், சுயநினைவின்றி சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் பின்னர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவரின் இளைய சகோதரர்களில் ஒருவரான ஹுவாங், சம்பவ இடத்தில் இருந்த பணியாளர்களிடமிருந்து அழைப்பு வந்த பின்னரே விபத்து குறித்து தான் அறிந்துகொண்டதாக சீன செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தனது சகோதரர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் படகில் பயணிகளை ஏற்றிச் சென்றும், சரக்குகளைக் கொண்டு சென்றும் பிழைப்பு நடத்தி வந்ததாகவும், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

