காணாமற்போயிருந்த 74 வயது ஆடவரின் உடலைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
30 மணிநேரத்துக்கும் மேல் காணாமற்போன சான் டக் சியூ என்ற ஆடவருக்கு மறதிநோயும் உடல் செயல்பாட்டைப் பாதிக்கும் மூளைக் குறைபாடும் (பார்க்கின்சன்ஸ்) இருந்தன..
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்றிலிருந்து நான்கு மணியளவில் அவர் கடைசியாகக் காணப்பட்டார். அப்போது அவர் சாம்பல், வெள்ளை நிறங்கள் கலந்த டி-சட்டையை அணிந்திருந்தார்.
பாங் சுவா பூங்காவில் நினைவிழந்து அசைவின்றி ஓர் ஆடவர் காணப்பட்டதாகவும் அந்த விவகாரத்தைக் காவல்துறை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மதர்ஷிப் ஊடகத்தின் கேள்விகளுக்கு சிங்கப்பூர்க் காவல்துறை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) காலை 11.40 மணியளவில் இத்தகவல்களைத் தெரிவித்தது.
ஆடவர் உயிரிழந்தது சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டது. அவர் சான்தான் என்று மதர்ஷிப் அறிகிறது.
கணவரைத் தேட பாங் சுவா பூங்காவிற்குச் சென்றபோது சான் இறந்தது தெரிய வந்ததாக அவரின் குடும்பத்தார் மதர்ஷிப்பிடம் கூறினர்.
பூங்காவில் காவல்துறை ஒரு பகுதியைத் தடுப்புப் போட்டு மூடியிருந்தனர். அதை சானின் குடும்பத்தார் பார்த்திருக்கின்றனர்.
பிறகு குடும்பத்தாரிடம் சம்பந்தப்பட்ட ஆடவர் சான்தான் என்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

