உட்லண்ட்ஸ் நீர்முகப்பு அணைகரை அருகே நீர்ப்பகுதியிலிருந்து வியாழக்கிழமை (நவம்பர் 7) பிற்பகல் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
ஆடவர் ஒருவர் காலையில் நீரில் விழுந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தததைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சடலத்தை மறைக்க பயன்படுத்தப்படும் நீல நிறக் காவல்துறை கூடாரத்தை மாலை 4.27 மணிக்குக் கண்டது.
முன்னதாக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு மாலை 4 மணிவாக்கில் பதிலளித்த சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், உட்லண்ட்ஸ் அணைகரை அருகே ஊழியர் ஒருவர் படகிலிருந்து நீரில் விழுந்துவிட்டதாகச் சொன்னது.
தேடுதல் முயற்சிகளை தான் ஒருங்கிணைத்ததாகக் கூறிய ஆணையம், சம்பவ இடத்துக்கு தன் படகை அனுப்பி அங்கு கடலோரக் காவல்படையுடனும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடனும் இணைந்து செயல்பட்டதாகவும் சொன்னது.
மாலை 4.10 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, உட்லண்ட்ஸ் நீர்முகப்புப் பூங்காவின் நுழைவாயிலுக்கு அருகே காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் காணப்பட்டன.
அணைகரை அருகே நீர்ப்பகுதியில் கடலோரக் காவல்படை, கடல்துறை, துறைமுக ஆணையப் படகுகளும் தென்பட்டன.
இச்சம்பவம் காலை 10 மணியளவில் நிகழ்ந்ததாக சாவ் பாவ் சீன நாளிதழ் தெரிவித்தது.

