வியட்னாமின் ஹோ சி மின் சிட்டியில் ஜூன் 13ஆம் தேதி சிங்கப்பூர் மாது ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டுக் காவல்துறை மாதின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்கிறது.
மாண்ட மாதின் பெயர் வெளியிடப்படவில்லை.
அவர் கோல்ட்வியூ எனும் கூட்டுரிமை வீடு ஒன்றில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
அவரது உடல் வற்றிய நிலையில் காணப்பட்டதாக ‘விஎன்எக்ஸ்பிரஸ்’ எனும் செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அந்த மாது அந்தக் கூட்டுரிமை வீட்டில் வசித்தவர் அல்லர் என்றும் கடைசியாக அவர் ஜனவரி 31ஆம் தேதி பொதுவெளியில் காணப்பட்டதாகவும் ‘த லேபொரர்’ நாளிதழ் கூறியுள்ளது.
தனது வீட்டில் மாதின் சடலத்தைக் கண்ட வீட்டு உரிமையாளர், ஜூன் 13ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கூட்டுரிமை வீட்டு நிர்வாக அமைப்புக்குத் தகவல் தந்தார். நிர்வாகத்தினர் அதேநாளில் காவல்துறையிடம் புகாரளித்தனர்.
உரிமையாளர் அந்த வீட்டை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை என்று கூறப்பட்டது.
வீட்டில் நுழைவதற்கான அனுமதி அட்டை கடைசியாக ஜனவரி 31ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு மின்தூக்கியில் நுழையப் பயன்படுத்தப்பட்டதாகப் பதிவாகியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவ இடத்தில் உள்ளூர் அதிகாரிகள் தடயவியல் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாது மாண்டதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்வதாக வியட்னாமிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் ஹோ சி மின் சிட்டியில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகம் வியட்னாமிய அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பதாக வெளியுறவு அமைச்சு ஜூன் 15ஆம் தேதி கூறியது. மாதின் குடும்பத்தினருக்கு உதவியும் ஆதரவும் வழங்கப்படுவதாக அது சொன்னது.