தடைசெய்யப்பட்ட எடை குறைப்பு மருந்தை உட்கொண்ட உடலுறுதிக் கலைஞர் உயிரிழந்தார்: நீதிமன்றம்

தடைசெய்யப்பட்ட எடை குறைப்பு மருந்தை உட்கொண்ட உடலுறுதிக் கலைஞர் உயிரிழந்தார்: நீதிமன்றம்

1 mins read
3ec3c4e8-b2b1-4c1b-b2ec-612237d86aea
சம்பந்தப்பட்ட ஆடவர் 2024ஆம் ஆண்டு உயிரிழந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடலுறுதிப் போட்டிகளில் பங்கேற்றுவந்த 20 வயது உடலுறுதிக் கலைஞர் ஒருவர், தடைசெய்யப்பட்ட உடல் எடை குறைப்பு மருந்தை உட்கொண்டதால் ஏற்பட்ட நச்சு பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்று மரண விசாரணை நீதிமன்றம் கூறியுள்ளது.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் கல்வி பயின்றுவந்த அவர் 2024ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதிவேக இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

மாண்ட இளையரின் அடையாளத்தை வெளியிட அனுமதி இல்லை. அந்த இளையர் தனது பெற்றோருடன் மூத்த சகோதரருடனும் வாழ்ந்து வந்ததாக இவ்வழக்கு விசாரணையை நடத்திய அதிகாரி, மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எடை குறைப்பு மருந்தை உட்கொண்டதால் தனக்கு அதிவேக இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டதாகக் கூறி அந்த ஆடவர் மருத்துவமனைக்குச் சென்றார். பிறகு அவர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையிலிருந்து டான் டோக் செங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அதே நாளில் அவர் உயிரிழந்தார்.

டினிட்ரோஃபெனோல் (dinitrophenol) நச்சுக் கலவையால் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கபபட்டுள்ளது.

டினிட்ரோஃபெனோல், நச்சு சட்டத்தின்கீழ் (Poisons Act) பட்டியலிடப்பட்டுள்ள மருந்துப் பொருளாகும். அது, உடல் எடை குறைப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் நச்சுத்தன்மை காரணமாக அது தடைசெய்யப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் யாரும் வேண்டுமென்றே தலையிட்டு பாதிப்பு ஏற்படுத்திய (foul play) சந்தேகம் இல்லை என்று விசாரணை நடத்திய அதிகாரி அகம்மது அப்டில்லா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்