இம்மாதம் ஏழாம் தேதி முதல் இவ்வாண்டின் சீனப் புத்தாண்டுக்கான ‘ஹொங்பாவ்’ நாணயங்களுக்குப் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு ஜனவரி 29, 30ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி வங்கிகளின் இணையப் பதிவுத் தளங்களின் வாயிலாக மக்கள் ‘ஹொங்பாவ்’ நாணயங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் வியாழக்கிழமையன்று (ஜனவரி 2) தெரிவித்தது. அன்பளிப்பாக வழங்குவதற்கு உகந்த நாணயங்களை இம்மாதம் 14ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
60 வயது அல்லது அதையும் தாண்டியோர், உடற்குறையுள்ளோர் மட்டுமே டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி வங்கிக் கிளைகளுக்கு நேரடியாகச் சென்று பழைய நாணயங்களை ஒப்படைத்து அவற்றுக்குப் பதிலாக அன்பளிப்புக்கு உகந்த புதிய நாணயங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 14ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஏடிஎம் இயந்திரங்களில் முன்பதிவின்றி ‘ஹொங்பாவ்’ நாணயங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூர் முழுவதும் ‘ஹொங்பாவ்’ நாணயங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
அன்பளிப்புக்கு உகந்தவையாகக் கருதப்படும் நாணயங்கள், மக்களிடையே பரிமாறிக்கொள்ளத் தோதான சுத்தமான நாணயங்களாகும். அத்தகைய நாணயங்கள், தரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பெற்றுக்கொள்ளப்படுபவற்றைப் போல் இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் விளக்கியது.

