வரலாற்றில் முதல் முறையாக அதிபர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களைக் காட்சிப்படுத்துவதோடு, முன்னாள் சிங்கப்பூர் அதிபர்களின் வரலாற்றை கூறும் விதமாகவும் தற்காலிக அதிபர் நூலகம் அமைந்துள்ளது.
முன்னாள் அதிபர்கள் ஹலிமா யாக்கோப், டாக்டர் டோனி டானோடு இணைந்து அதிபர் தர்மன் சண்முகரத்னம் சனிக்கிழமை, ஜூலை 12ஆம் தேதி இந்தத் தற்காலிக அதிபர் நூலகத்தைத் திறந்து வைத்தார்.
இவர்கள் மூவரின் பரிந்துரைக்கு ஏற்றவாறு 21 நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘அதிபர் பரிந்துரைத்த புத்தகங்கள்’ என்ற வாசிப்பு இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நூலகத்தின் திறப்பு விழாவை அடுத்து, அதிபர் தர்மன், முன்னாள் அதிபர்களோடு இணைந்து தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தற்காலிக அதிபர் நூலகத்தைப் பார்வையிட்டார்.
தேசிய நூலக வாரியத்தின் 30ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வாசிப்பு30 என்ற நிகழ்வின் ஓர் அங்கமாக இந்தத் தற்காலிக அதிபர் நூலகம் பிளாசா சிங்கப்பூரா பேரங்காடியின் ‘ஃபைவ் கைஸ்’ (Five Guys) கடைத்தொகுதிக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை வாசகர்கள் நூலகத்திற்கு வருகை புரியலாம்.
வாசிப்பு, வரலாறு, பாரம்பரியம் என வெவ்வேறு கூறுகளை ஒன்றிணைக்கும் இந்தக் கண்காட்சியில் சிங்கப்பூரின் மற்ற முன்னாள் அதிபர்கள் குறித்த 40க்கும் மேற்பட்ட நூல்களும் வைக்கப்பட்டுள்ளன.
“நான் தேர்ந்தெடுத்த எட்டு புத்தகங்களும் சராசரி சிங்கப்பூரர்களை பற்றியது. வெவ்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கும் தனித்துவமான நாடான சிங்கப்பூரின் வியக்கத்தக்க வரலாற்றை இந்தப் புத்தகங்கள் எடுத்துரைக்கும்,” என்றார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
தொடர்புடைய செய்திகள்
மக்கள் அதிபர்களை அதிகாரத்துவ பதிவியில் இருப்பவர்களாக மட்டுமே சிந்திக்கின்றனர் என்றும் அவர்களது தினசரி வாழ்க்கையை பற்றியும் இயல்பான குணத்தை பற்றியும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அரிது என்றும் அதிபர் குறிப்பிட்டார்.
கடந்து வந்த பாதை குறித்தும் சந்தித்த ஏராளமான சவால்கள் குறித்தும் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் அவர்களே எழுதிய ‘ஏன் அன்எக்ஸ்பெக்டட் ஜர்நீ’ (An Unexpected Journey) என்ற ஆங்கில நூலும் நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நூல்களில் அடங்கும்.
இந்த நூல் ‘உழைப்பின் உயர்வு’ என்ற தலைப்பில் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
“அறிவை வளர்த்துக்கொள்ள மட்டும் வாசிக்கும் வழக்கத்தைத் தாண்டி, ஒரு பொழுதுபோக்காக வாசித்து மகிழ இளையர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தேசிய நூலக வாரியத்தின் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் திட்டமைப்பு, மேம்பாடுப் பிரிவின் மேளாலர் லாவண்யா கிருஷ்ணமூர்த்தி.
இந்த நோக்கத்தை முன்னிறுத்தி, வாசிப்பு30 நிகழ்வின் மற்ற சிறப்பு அம்சங்களாக ஆர்ச்சர்ட் சாலையில் 30 பிரபலன்களால் பரிந்துரைக்கப்பட்ட 90 நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வருகையாளர்கள் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதிவரை ஆர்ச்சர்ட் சாலையில் இந்தப் புத்தகங்களைக் கண்டு களிக்கலாம்.