ஜூரோங் வெஸ்ட்டில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) காலை, எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துடன் வேன் ஒன்று மோதியதை அடுத்து 49 வயது வேன் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 64ஐ நோக்கிச் செல்லும் ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 3ல் பூன் லே பேருந்துச் சந்திப்புக்கு அருகே நடந்த சம்பவம் குறித்துக் காலை 7.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
வேனை ஓட்டிய ஆடவர் சுயநினைவுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அவர் விசாரணையில் உதவவிருப்பதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
சமூக ஊடகத் தளமான சியாஹொங்ஷுவில் (Xiaohongshu) கார்கோ எனும் பயனாளர் பதிவிட்ட படங்கள் சாம்பல் நிற வேன் தரையில் சாய்ந்து கிடப்பதையும் அதன் பின்கதவு திறந்திருப்பதையும் காட்டுகின்றன.
சேவையில் இல்லை எனும் வாசகத்துடன் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒன்று அந்த வேனுக்குச் சிறிது தொலைவில் நின்றிருப்பதைக் காணமுடிகிறது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவன ஊழியர்களுடன் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவ உதவி வாகனமும் அங்கே காணப்பட்டது.

