தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூன் லே மரணம்: ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

1 mins read
a977837e-5584-4e05-bbb8-29fe6d0a3da6
மாண்ட ஆடவரின் உடலைக் காவல்துறையினர் அகற்றுகின்றனர். - படம்: ‌ஷின் மின்

பூன் லே வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் இளம் ஆடவர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) மாண்டுகிடந்தார்; அதனைத் தொடர்ந்து 58 வயது ஆடவர் ஒருவர் மீது வியாழக்கிழமை (மார்ச் 13) கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

பூன் லே அவென்யூவில் உள்ள ஒரு வீவக வீட்டில் செவ்வாய்க்கிழமையன்று 56 வயது ஆடவர் ஒருவர் மாண்டுகிடந்ததைத் தாங்கள் கண்டறிந்ததாகக் காவல்துறை புதன்கிழமையன்று (மார்ச் 12) தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை காலை 11.35 மணியளவில் அதுகுறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். அவரும் மாண்டவரும் ஒருவருக்கொருவர் பழக்கப்பட்டவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல்துறை சொன்னது.

இருவரும் சகோதரர்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியது.

செவ்வாய்க்கிழமை மாலை 5.25 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்றபோது சம்பந்தப்பட்ட வீட்டைச் சுற்றி காவல்துறை அதிகாரிகள் பலர் காணப்பட்டனர். ஐந்து நிமிடங்கள் கழித்து மாண்டவரின் உடல் அகற்றப்பட்டது.

சந்தேக நபரும் மாண்ட ஆடவரும் அந்த வீட்டில் ஒன்றாக வாழ்ந்ததாக அக்கம்பத்தாரில் ஒருவர் சொன்னார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்