பூனை வதை அதிகரிப்பு; கூடுதல் பாதுகாப்புக்கு அழைப்பு

பூனை வதை அதிகரிப்பு; கூடுதல் பாதுகாப்புக்கு அழைப்பு

2 mins read
b8dd86ed-e1a8-4bb9-b4e3-878436083fe2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்வாண்டு சிங்கப்பூரில் பூனை வதைச் சம்பவங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக விலங்கு வதைத் தடுப்பு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர் தெரிவித்துள்ளார். இதனால் பூனைகளைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டிலும் 60 விலங்கு வதை சம்பவங்கள் பதிவாகியதாக விலங்கு, விலங்கு மருத்துவச் சேவை தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 11 பூனை வதைச் சம்பவங்கள் குறித்து விலங்கு வதை தடுப்பு மன்றம் விசாரணை நடத்தியது.

கடந்த ஆண்டில் 16 பூனை வதைச் சம்பவங்கள் குறித்தும் 2021ஆம் ஆண்டில் 11 பூனை வதைச் சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக சங்கம் கூறியது.

ஆனால், இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்களிலேயே அதிகமான பூனை வதைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை மன்றம் சுட்டியது.

பூனைகளை மீட்பதையும் தாண்டி பூனைகளைப் பாதுகாப்பதில் தனது பங்களிப்பைச் சங்கம் விரிவுபடுத்தியிருப்பதாக பூனை நலச் சங்கத்தின் தலைவர் தேனுகா விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

"தகவல் சேகரிப்பு, பூனை வதை, பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சங்கம் முனைகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பூனை வதைச் சம்பவங்கள் குறித்து தகவல் சேகரிப்பதுடன் விலங்கு, விலங்கு மருத்துவச் சேவையுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்," என்றார் தேனுகா.

இதற்கிடையே, சலிப்புத்தன்மை, குடும்ப வன்முறை போன்றவற்றால் சிலர் விலங்குகளைத் துன்புறுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனிமை, விரக்தி போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படும் சிலர் அவற்றிலிருந்து விடுபடும் நோக்கில் விலங்குகளைத் துன்புறுத்துவதாக மூத்த தடயவியல் உளவியல் நிபுணர் ஜூன் போங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்