காய்ச்சாத பாலைக் குடித்த பால் பண்ணையாளருக்கு மாடுகளிடையே காணப்படும் காசநோய்க் கிருமி தொற்றியுள்ளது.
சிங்கப்பூரில் அத்தகைய கிருமியால் பாதிக்கப்பட்ட முதலாமவர் அவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 28 ஆண்டுகளாகப் பால் பண்ணையாளராக இருக்கும் 73 வயது ஆடவர், அன்றாடம் மாட்டுப் பாலைக் கறந்தவுடன் காய்ச்சாமல் குடித்துவந்தார்.
2021ஆம் ஆண்டு அவருக்கு நோய் தொற்றியது பற்றித் தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவித்தது. காசநோய்க்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளைக் கொண்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
காசநோய் எந்தவகைக் கிருமியால் தொற்றினாலும் பரவுதல், தடுத்தல், சிகிச்சை அளித்தல் முதலியவை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆடவருடன் நெருக்கமாக இருந்த எவருக்கும் காசநோய்க் கிருமி தொற்றவில்லை என்பது பரிசோதனைகளில் தெரியவந்தது. எத்தனை பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற விவரத்தை அமைப்பு வெளியிடவில்லை. சிங்கப்பூரில் மாடுகளுக்குத் தொற்றக்கூடிய காசநோயால் பாதிக்கப்பட்டவர் அந்த இந்திய ஆடவர் மட்டுமே.
காசநோய் உலக அளவில் பொதுச் சுகாதார அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதன் பரவலைத் தடுக்க முடியும். சிகிச்சையும் அளிக்க முடியும். 2023ல் உலகெங்கும் 10.8 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் தொற்றியது. ஏறக்குறைய 1.25 மில்லியன் பேர் அதற்குப் பலியாயினர்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டில் (2024) இங்கு வசிப்போரிடையே புதிதாகக் காசநோய் கண்டவர்களின் எண்ணிக்கை 1,156ஆக இருந்தது. 2023ன் எண்ணிக்கையான 1,201ஐவிட அது சற்றுக் குறைவு.
மாடுகளிடையே காணப்படும் காசநோய், காய்ச்சாத பாலையும் அது தொடர்பான பொருள்களையும் உட்கொள்வதால் பரவக்கூடும் என்று அமைப்பின் தொற்றுநோய்த் தடுப்புத் திட்டங்களுக்கான குழும இயக்குநர் இணைப் பேராசிரியர் லிம் போ லியான் கூறினார். அவ்வாறு நோய் பரவுவது இங்கு அரிது என்றும் அவர் குறிப்பிட்டார். பாலைக் காய்ச்சிக் குடிக்கும்போது அதிலிருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்கிருமிகள் செயலற்றுப் போய்விடுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட ஆடவருக்கு மாட்டுக் காசநோய்க் கிருமி தொற்றிய தகவலை, டான் டோக் செங் மருத்துவமனை, தேசியப் பொதுச் சுகாதார ஆய்வுக்கூடம், சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை ஆகியவற்றின் ஆய்வாளர்கள் அளித்திருந்தனர். அவர்கள் சிங்கப்பூர் மருத்துவச் சஞ்சிகையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.


