மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: பெண், சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
adbf8f7d-1e3b-4593-a1cc-e5e0a9c8f4b3
விபத்து தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள். - படம்: Singapore Roads Accident.com / ஃபேஸ்புக்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) அதிகாலை நிகழ்ந்த விபத்தின் தொடர்பில் பெண் ஒருவரும் எட்டு வயதுச் சிறுவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் மூன்று கார்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக பின்னிரவு 12.05 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அந்த கார்களில் ஒன்றின் ஓட்டுநரான 36 வயதுப் பெண்ணையும் அதிலிருந்த 8 வயது சிறுவனையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவ்விருவரும் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து நேர்ந்த விதம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

இரண்டு தடங்களைக் கொண்ட சாலையில் சிவப்பு நிற கார் ஒன்றும் பலபயன் வாகனங்கள் இரண்டும் நிற்பதையும் அந்த இடத்தைச் சுற்றிலும் உடைந்த பாகங்கள் கிடப்பதையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று காட்டியது.

சிறப்பு நிற காருக்கு அருகே இருந்த சாலை ஓரத்தில் சிறுவன் ஒருவன் உட்கார்ந்திருப்பதையும் சாலையில் ரத்தம் சிந்தியிருப்பதைப் போலவும் காணொளியில் காணமுடிந்தது.

சேதமடைந்த வாகனங்களுக்கு இடையே மோட்டார் சைக்கிள்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதும் அதில் பதிவாகி இருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்