தனியார் குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்திற்குள் ஒரு வயது குழந்தை விழுந்து மூழ்கி மாண்டது. சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அக்குழந்தை தனியாக விளையாடிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதியன்று பிற்பகல் சுமார் 12.53 மணிக்கு நிகழ்ந்ததாக சீனமொழி நாளிதழான சாவ்பாவ் தெரிவித்தது.
குழந்தை நீச்சல் குளத்திற்குள் விழுந்து கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகே அவரது பெற்றோருக்கு அதுகுறித்து தெரியவந்தது.
அக்குழந்தை நீச்சல் குளத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால், பின்னர் குழந்தை மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் நடந்துகொண்ட விதம் குறித்து மாண்ட குழந்தையின் தந்தை அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளார்.
பெற்றோரின் அடையாள ஆவணங்களைக் காண்பதற்கு முன்பு குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல அந்த மருத்துவ உதவியாளர் மறுத்துவிட்டதாக அவர் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
குழந்தையின் மரணம் குறித்து புதன்கிழமை (அக்டோபர் 6) மரண விசாரணை அதிகாரியின் வழக்கு விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரி, அவசரகால மருத்துவர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
மாண்ட குழந்தையின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தை அடைந்த மருத்துவ உதவியாளர் உடனடியாகப் போதுமான முதலுதவி அளித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், உயிரைக் காப்பாற்ற ஒவ்வொரு வினாடியும் முக்கியம் என்பதை அவர் உணராமல் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதுவே அவரது முதல் அனுபவம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சூழலில் அவர் எத்தகைய உத்திகளைக் கடைப்பிடித்திருக்கலாம் என்பது கோடிட்டுக் காட்டப்பட்டது.
ஆம்புலன்சின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையின் தந்தையிடம் அவரது அடையாள அட்டையை அந்த மருத்துவ உதவியாளர் கேட்டதை மருத்துவ உதவியாளரின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின.
அடையாள அட்டையைக் காட்டாவிடில் அங்கிருந்து தாம் கிளம்பிச் செல்ல முடியாது என்று மருத்துவ உதவியாளர் கூறியது காணொளியில் தெரிந்தது.
மருத்துவ உதவியாளர் கேட்டதற்கு இணங்க, குழந்தையின் தந்தை அவரிடம் தமது அடையாள அட்டையைக் காட்டினார்.
இதையடுத்து, ஒரு நிமிடம், 43 வினாடிகள் கழித்து ஆம்புலன்ஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
ஒன்பது நிமிடங்கள் கழித்து அது மருத்துவமனையை அடைந்தது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு பின்னர் ஒருநாள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


