வெளிநாட்டு ஊழியர்களுக்காக இசைமூலம் நிதி திரட்டும் சிறுவன்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக இசைமூலம் நிதி திரட்டும் சிறுவன்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2026 - 4:39 pm

2 mins read

ஏறத்தாழ 1,000 வெளிநாட்டுக் கட்டுமான ஊழியர்களுக்கு உணவளிக்கும் நோக்கத்துடன் இசையின் மூலம் நிதி திரட்டுகிறார் ஜார்ஜ் வோங், 11.

பிரபல பாப் பாடல்களை இசைக்கருவிகளில் வாசித்துப் பதிவுசெய்வதுடன் 15 நிமிட நேரலை மெய்நிகர் இசை நிகழ்ச்சியை நடத்துவதன் வாயிலாகவும் நன்கொடை திரட்டுகிறார் இந்தச் சிறுவன்.

தொடர்புத்திறன் குறைபாடும் (ஆட்டிசம்) கவனக்குறைவு மிகைச் செயல்பாட்டுக் குறைபாடும் கொண்ட ஜார்ஜ், நிதி திரட்டுவதற்காக கிட்டார், யுகுலேலே, பியானோ ஆகியவற்றை வாசிக்கிறார்.

பீ சுன் பொதுப் பள்ளி மாணவரான இவர், தமது தாயாரின் உதவியுடன், முந்தைய இலக்கான 3,000 வெள்ளியிலிருந்து சற்றுக் கூடுதலாக 6,000 வெள்ளி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளார்.

‘ஜார்ஜ’ஸ் மியூசிக் ஃபார் குட்’ (georgemusicforgood.com) எனும் இணையத்தளம் மூலம் திரட்டப்படும் அனைத்து நிதியும் 120 பெரிய பீட்சாக்கள், குளிர்பானங்கள், ரொட்டி, பழம் அல்லது பலகாரங்கள் போன்ற 1,000 சிற்றுண்டிகளை வாங்கப் பயன்படுத்தப்படும்.

ஜார்ஜும் அவரது குடும்பத்தினரும் நேரில் சென்று ஊழியர்களுக்கு அந்த உணவு, பானங்களை விநியோகிப்பர். நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதித்திரட்டு, ஜனவரி 31ஆம் தேதி நிறைவடையும். அதற்கு முன்னரே இலக்கு எட்டப்பட்டால் அதற்கேற்ப அது நிறைவடையும். இதுவரை 2,000 வெள்ளிக்கும் மேல் திரட்டப்பட்டுள்ளது.

2025ல் பள்ளிக்குச் செல்லும் வழியில் காதிப் ரயில் நிலையம் அருகே நடமாடும் சாதனத்தில் வந்த விற்பனையாளரிடம் சேமித்துவைத்திருந்த சில்லறைகளைக் கொண்டு ஜார்ஜ் 30 ‘டி‌ஷ்யூ’ பொட்டலங்களை வாங்கிவைத்திருந்ததைக் கண்டு வியந்தார் இவரின் தாயார் சென் வெய்வென். விளிம்பு நிலை மக்கள்மீதான ஜார்ஜின் கருணை அதன் மூலம் வெளிப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரியில் தமது பத்தாவது பிறந்தநாளின்போது, ரயில் அறிவிப்புகள் குறித்த வினாடிவினா அங்கத்தை நடத்தியதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணப் பரிசுகளை வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடையாக வழங்கியதே இத்திட்டத்திற்கு வித்திட்டது.

பின்னர், ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ அறநிறுவனத்தின் தீபாவளி உணவு விநியோகத்தில் பங்கேற்றபோது உணவு போதாததைக் கண்ட ஜார்ஜ், தாயாருடன் இணைந்து இப்புதிய நிதித்திரட்டு முயற்சியைத் தொடங்கினார்.

தொடர்புக் குறைபாடு காரணமாகக் கேலி செய்யப்பட்ட தமது மகனின் தன்னம்பிக்கையை வளர்க்கவே உயர்ந்த இலக்கை நிர்ணயிக்குமாறு ஊக்குவித்ததாகத் திருவாட்டி சென் கூறினார்.

குறிப்புச் சொற்கள்