வடக்கு-தெற்கு பெருவிரைவு ரயில் பாதையில் பீஷான், தோ பாயோ நிலையங்களுக்கு இடையே சேவை இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.
புதன்கிழமை (ஏப்ரல் 16) காலை 11.15 மணிக்கு பிராடல் நிலையத்தில் தளமேடைக் கதவு தண்டவாளத்தில் விழுந்தது. பின்னர் நண்பகல் 12.30 மணிக்கு ரயில் சேவை இயல்புநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிராடல் நிலையத்தில் தடக் கதவு தண்டவாளத்தில் விழுந்ததால் பீஷான், தோ பாயோ நிலையங்களுக்கு இடையே முன்னதாகத் தாமதம் ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்திருந்தது.
யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
தங்களின் பயண நேரம் 15 நிமிடங்கள் கூடலாம் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு எஸ்எம்ஆர்டி, புதன்கிழமை காலை 11.25 மணிக்கு சம்பந்தப்பட்ட பயணிகளைக் கேட்டுக்கொண்டது. ஜூரோங் ஈஸ்ட் நிலையத்தை நோக்கிய பாதையில் பயணம் செய்வோருக்கு இது பொருந்தும்.
இருவழி ரயில் போக்குவரத்தும் இடம்பெறும் பாதைகளில் இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்படும் என்று எஸ்எம்ஆர்டி கூறியது. பிரச்சினை சரியானவுடன் இலவசப் பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தெற்கு திசையில் சென்றுகொண்டிருந்த ரயில்கள், பீஷான் நிலையத்தை நோக்கிச் செல்லும்போது பின்னோக்கிச் சென்றதாக பயணிகள், எஸ்எம்ஆர்டியின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர்.