திடீரென எழும் உணர்ச்சிகளை அடக்கி, அந்த நேரத்தில் மூளையின் பல்வேறு பகுதிகள் எவ்வாறு ஒன்றிணைந்து தற்கட்டுப்பாட்டை (self control) உருவாக்குகின்றன என்பதைச் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவக் கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் கவனக்குறை மிகைச்சுறுதி (ஏடிஎச்டி),போதைப்பொருளுக்கு அடிமையாதல் போன்ற நிலைமைகளைப் பற்றிய புரிதலை மேம்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வாளர்கள் மூளையின் மூன்று பகுதிகளை ஆய்வுசெய்தனர்.
சிந்தனைத் திறன் மற்றும் சிக்கலான அறிவாற்றல் செயல்பாடுகளை அப்பகுதிகள் மேற்கொள்ளும். மேலும், அந்தப் பகுதிகள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமானவை.
இந்த மூன்று பகுதிகளில் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாகச் செயல்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வில் எலிகளின் தற்கட்டுப்பாடு குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
எலிகளின் மூளையிலுள்ள பல்வேறு பகுதிகளின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த ஒளிஉயிரணுவியல் (optogenetics) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மூளையின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடைய செயல்பாடுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்கட்டுப்பாடானது தனித்த, ஒருங்கிணைக்கப்பட்ட செயல்முறையன்று எனவும் குறைந்தது மூன்று வெவ்வேறு மூளைப் பகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கணக்கீட்டுச் செயல் என்றும் ஆய்வாளர்களில் ஒருவரான துணைப் பேராசிரியர் காமிகாக்கி கூறினார்.
இது, ஒவ்வொரு மூளைப் பகுதியையும் துல்லியமாகக் குறிவைப்பதன்மூலம், கொள்கை அளவில், திடீர்த் தூண்டுதல் நடத்தையைக் கட்டுப்பாடான வழியில் நம்மால் மாற்றியமைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.
கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளத் தடுமாறுவோரைப் பற்றிய நமது சிந்தனையில் இது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.
இந்த ஆய்வு முடிவுகள், சக ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்ட கட்டுரைகள் வெளியாகும் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ எனும் சஞ்சிகையில் 2025 அக்டோபரில் வெளியிடப்பட்டன.

