‘குடும்ப வன்முறை தனிப்பட்ட விவகாரம் அன்று’

4 mins read
ab9b5591-7533-42a9-82db-bdf3ab136f01
கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய துணை அமைச்சர் முரளி பிள்ளை. - படம்: சுந்தர நடராஜ்

இந்தியச் சமூகத்தில் நடைபெறும் குடும்ப வன்முறை குறித்து மௌனம் காக்காமல், முன்வந்து, சமூக அமைப்புகளின் உதவியை நாட வேண்டியது அவசியம் என்று செப்டம்பர் 22ஆம் தேதி, டெசென்சான் ரோட்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிளப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), இந்து அறக்கட்டளை வாரியம், காஸா ரவுதா (Casa Raudha Ltd (CRL)) உள்ளிட்ட சமூக அமைப்புகளுடன் இணைந்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நடத்திய இந்தக் கருத்தரங்கில் சட்ட, போக்குவரத்துத் துணையமைச்சர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

“குடும்ப வன்முறை தனிப்பட்ட விவகாரம் அன்று,” என்று கூறிய அவர், கடந்த 2019ஆம் ஆண்டு நிலவரப்படி சிங்கப்பூர் மக்கள்தொகையில் குறைந்தது மூன்று விழுக்காட்டினர் ஏதாவது ஒருவகை வன்முறைக்கு ஆளானதைச் சுட்டிக்காட்டினார்.

“இன, வயது, பாலின வேறுபாடின்றி குடும்ப வன்முறை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்று சொன்ன அவர், அதைத் தடுக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று வலியுறுத்தினார். அதைச் சட்ட ரீதியில் அணுக, அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

குடும்ப வன்முறைக்கு ஆளாவோர் முன்வராவிட்டாலும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களோ நண்பர்களோ அதுகுறித்த உதவிக்குத் தனிநபர் பாதுகாப்பு ஆணைக்கு (Personal Protection Order) விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

வன்முறைக்கு ஆளானோர்க்குப் பாதுகாப்பு வழங்குவது, வன்முறையாளர்களுக்கு உரிய மனநல உதவிகள் அளிப்பது ஆகியவை குறித்தும் துணை அமைச்சர் முரளி பிள்ளை பேசினார். இவை அனைத்தையும் உறுதிசெய்யும் நோக்கில் செயலாற்றும் சமூக அமைப்புகளையும் அவர் பாராட்டினார்.

(இடமிருந்து) கரம் சிங் (சிங்கப்பூர் சிறைச் சேவை இயக்குநர்), ஸகாரா (காசா ரவுதா அமைப்பின் நிர்வாக இயக்குநர்), செங்குட்டுவன் கன்னியப்பன் (இந்து ஆலோசனை மன்றத் தலைவர்), பென் ஆங் (தை ஹுவா குவான் நன்னெறி அறக்கட்டளைகள்), கணேசன் பழனிச்சாமி.
(இடமிருந்து) கரம் சிங் (சிங்கப்பூர் சிறைச் சேவை இயக்குநர்), ஸகாரா (காசா ரவுதா அமைப்பின் நிர்வாக இயக்குநர்), செங்குட்டுவன் கன்னியப்பன் (இந்து ஆலோசனை மன்றத் தலைவர்), பென் ஆங் (தை ஹுவா குவான் நன்னெறி அறக்கட்டளைகள்), கணேசன் பழனிச்சாமி. - படம்: சுந்தர நடராஜ்

தனது பதினான்காம் வயதிலிருந்து தொடர்ந்து பல்வேறு வன்முறை ஈடுபட்டு ஏறத்தாழ 37 ஆண்டுகளைச் சிறையில் கழித்த கணேசன் பழனிச்சாமி, 54, தான் அதிலிருந்து மீண்டுவந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இணைந்தது குறித்துப் பேசினார்.

குடும்பத்தினர், மனைவி, சுற்றத்தாரைப் பலமுறை வன்செயல்களுக்கு ஆளாக்கியதாகவும் குடும்பம் காட்டிய மாறாத அன்பு, அரவணைப்பு ஆகியவற்றோடு தை ஹுவா குவான் நன்னெறி அறக்கட்டளைகள் (Thye Hua Kwan Moral Charities) தந்த ஆதரவாலும், தான் புது மனிதனாக மாறியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

உண்மையை உணர்ந்து திருந்தியபோது தனது இளமை தொலைந்து போனதை வருத்தத்துடன் கூறிய அவர், தற்போது அவ்வகைச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவளிக்கவும் பாதிக்கப்பட்டோர்க்கு ஆதரவளிக்கவும் சமூக அமைப்புகள் முன்வருவதை உரியோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய இந்து ஆலோசனை மன்றத் தலைவர் செங்குட்டுவன் கன்னியப்பன், “இந்திய சமூகத்தினரின் குடும்ப அமைப்பு, சக குடும்பத்தினர் குறித்தும், வீட்டுப் பிரச்சினைகள் குறித்தும் வெளியில் சொல்லாமல் தடுக்கிறது. தங்கள் பிரச்சினைக்கு வெளியில் தீர்வு தேடினால் குடும்பம் சிதைந்துவிடும் என்று நினைக்கின்றனர். அது உண்மை அன்று,” என்றார்.

“தாங்களாகவே சிரமத்தை அனுபவித்துக் கொண்டிராமல், உரிய வல்லுநர்களை அணுகினால் சிக்கல் தீரும். குடும்ப அமைப்புகளுக்கு பங்கம் விளைவிக்காதவாறு சிக்கலைத் தீர்க்கும் வழிகளும் உள்ளன. அதற்கான சமூக அமைப்புகளை விரைவில் நாடுவது நல்லது,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர் சமூகத்தில் நடைபெறும் பல்வேறு வன்முறைகள் குறித்து விளக்கினார் காசா ரவுதா நிர்வாக இயக்குநர் ஸகாரா. மன, நிதி, உடல் ரீதியிலான வன்முறைகள் குறித்து விளக்கியதுடன், அது அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு கடத்தப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டோருக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இதிலிருந்து வெளிவந்தால் வாழ்க்கை பாதிக்காது எனத் தன்னம்பிக்கை அளிப்பதுடன் உரிய சட்ட உதவிகள் குறித்த ஆலோசனைகள் வழங்குவதையும் சமூக அமைப்புகள் செய்துவருவதாக அவர் கூறினார்.

தொடர்ந்து, இந்து ஆலோசனை மன்றத் தலைவர் செங்குட்டுவன் கன்னியப்பன், காசா ரவுதா நிர்வாக இயக்குநர் ஸகாரா, திரு கணேசன் பழனிச்சாமி, தை ஹுவா குவான் நன்னெறி அறக்கட்டளைகள் (Thye Hua Kwan Moral Charities) சார்பில் பென் ஆங் உள்ளிட்டோர் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.

அதில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, வீட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம், நிதி ரீதியிலான வன்முறை குறித்துப் பேசப்பட்டது.

“இந்தியச் சமூகத்தினர் கோவிலில் கடவுளிடம் தங்கள் குறைகளைச் சொல்வது போலவே, அதிலிருந்து விடுபட உதவும் சேவை அமைப்புகளிடமும் பகிர்ந்துகொள்ளலாம். கோவில்களில் உள்ள அலுவலகத்தை நாடினால் இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை அமைப்புகளிடம் தொடர்புகொள்ள உதவுவார்கள். அமைப்பு இயன்றவரை உதவுவதுடன், தேவையான பிற உதவிகளுக்கு உரிய அமைப்புகளுடன் தொடர்புகொள்ளவும் உதவி செய்யும். பாதிக்கப்பட்டோர் தயங்காமல் முன்வர வேண்டியது அவசியம்,” என்று கேட்டுக்கொண்டார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை செயற்குழுத் தலைவர் சுசீலா கணேசன்.

குறிப்புச் சொற்கள்