பாலியல் வன்முறைக்கு ஆளாகுவோருக்கு தற்போது அதிக ஆதரவு உள்ளது.
பாலியல் வன்முறை குறித்து புகார் செய்வதற்கான தடைகளை உடைப்பதில் அண்மைய ஆண்டுகளில் வெவ்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன.
அத்தகைய சம்பவம் குறித்து புகாரளிக்க காவல் நிலையங்களில் முன்னுரிமை வரிசை, விசாரணையில் உணர்வுரீதியான ஆதரவு, முறையற்ற கேள்விகளிலிருந்து பாதுகாக்க ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் மிகவும் கவனமாக நடத்தப்படுவது என்று ஆதரவு அதிகரித்துள்ளது.
அத்துடன், பலர் உதவி நாடுகின்றனர்.
தேசிய வன்முறை எதிர்ப்பு, பாலியல் துன்புறுத்தல் உதவி மையம் 2023ல் கிட்டத்தட்ட 11,600 அழைப்புகளைப் பெற்றன. இந்த எண்ணிக்கை 2022ல் 10,800 ஆகவும் 2021ல் 8,400 ஆகவும் இருந்ததாக அதிகாரிகளின் அண்மைய புள்ளிவிவரங்கள் சுட்டின.
தேசிய வன்முறை எதிர்ப்பு உதவி மையம் என்ற அதன் முன்னைய பெயர், பாலியல் குற்றங்கள் உட்பட எந்த வகையான வன்முறையையும் அனுபவிப்போருக்கு ஆதரவளிப்பதில் அதன் செயல்பாட்டை சிறப்பாக பிரதிபலிப்பதற்காக 2022ல் மாற்றப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் 2,200 முதல் 2,400 வரை என, 2018 ஜனவரிக்கும் 2022 நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் பாலியல் தாக்குதல் குறித்து 11,868 புகார்கள் அளிக்கப்பட்டன. பாலியல் வன்கொடுமை, ஊடுருவுதல் மூலம் பாலியல் தாக்குதல், மானபங்கம், குழந்தைகள், எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்கள் முதலியவை இதில் அடங்கும்.
கேர் கார்னர் திட்டமான ‘ஸ்டார்ட்’ (StART) 2021ல் தொடங்கிய பாலியல் தாக்குதலிலிருந்து மீளும் திட்டம், ஆண்டுதோறும் சராசரியாக 40 பேருக்கு உதவுகிறது. உதவி பெற முன்வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக ஸ்டார்ட்-இன் துணைத் தலைவர் திருவாட்டி ஃபெய்த் லீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறையின் பரிந்துரைகள் தவிர்த்து, அவ்வமைப்பிடம் கடந்த கால பாலியல் தாக்குதல் சம்பவங்கள் குறித்த உணர்வுபூர்வமான ஆதரவு நாடுவோரின் சுய கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. மேலும், தொடக்கத்திலேயே அதிகமானோர் உதவியை நாடுகின்றனர்.
“தக்க நேரத்தில் தலையீடு, ஆதரவின் முக்கியத்துவம் பற்றி அதிகரித்த விழிப்புணர்வே இதற்கு காரணம் என்று நினைக்கிறோம்,” என்று திருவாட்டி லீ கூறினார்.
முன்னர் முக்கியமாக குடும்ப வன்முறையில் உதவி வந்த மூன்று பாதுகாப்பு நிபுணத்துவ மையங்கள், ஜனவரி 2023 முதல், அனைத்து வகையான பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக மற்றும் உணர்வு ரீதியான ஆதரவை வழங்குகின்றன.
இந்த மையங்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நடத்துகிறது.
மேலும், ஏப்ரல் விசாரணைகளின் தரத்தை உயர்த்தவும், பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளை சிறந்த முறையில் மேற்பார்வையிடவும் 2023 ஏப்ரலில் காவல்துறை பாலியல் குற்றம், குடும்ப வன்முறை தளபத்தியத்தை அமைத்தது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்காக அக்கம்பக்கக் காவல் நிலையங்களில் முன்னுரிமை வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேர்காணல்களின்போது அவர்களுக்கு தனிப்பட்ட இடமும் வழங்கப்படுகிறது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு, பாதிக்கப்பட்டோர் பராமரிப்பு அதிகாரியின் சேவைகளும் வழங்கப்படுகிறது. அவர்கள் குற்றவியல் நீதி செயல்முறை முழுவதும் உணர்வு ரீதியான, நடைமுறை ஆதரவை வழங்குவர். 2014ல் 11ஆக இருந்த அத்தகைய அதிகாரிகள் எண்ணிக்கை தற்போது 250 ஆக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை குறிப்பிட்டது.
2023 ஜனவரி முதல், பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த முறையில் ஆதரவளிக்க காவல்துறை ‘எஸ்ஜி ஹர் என்பவர்மெண்ட்’ (SG Her Empowerment (SHE) அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
கடுமையான பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட சிலர், புகாரளிக்க உதவிபெற ஷீகேர்ஸ்@ சிங்கப்பூர் மாதர் அமைப்புகள் மன்றம் மையத்திற்குச் செல்லும்போது, பாதிக்கப்பட்டவரின் அசௌகரியத்தைத் தவிர்க்க காவல்துறை அதிகாரிகள் அங்கு செல்வர்.
மேலும் ஒரு நடவடிக்கையாக, பாலியல் குற்றம் தொடர்பாக புகார் செய்பவர்களை முறையற்ற கேள்விகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் ஜனவரி 13 அன்று புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தின.
புதிய நடவடிக்கைகளின் கீழ், நீதித் துறை விசாரணைக்கு முந்தைய கட்டத்தில் சரிபார்ப்பு பட்டியல் மூலம், குறுக்கு விசாரணையில் ஆராயப்படும் சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து அடையாளம் காணப்படும். இது வழக்கு விசாரணையின்போது புகார்தாரருக்கு பொருத்தமற்ற அல்லது அவமதிக்கும் வகையில் கேள்விகளை நிராகரிக்க நீதிபதியை அனுமதிக்கும்.
சில பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை அனுபவம் வாய்ந்த, சிறப்பாக பயிற்சி பெற்ற நீதிபதிகள் விசாரிப்பர்.
இந்த மாற்றங்கள் பாலியல் வன்முறை குறித்து புகாரளிப்பதில் குறிப்பிடத்தக்க தடைகளை நீக்கியுள்ளதாக அவேர் அமைப்பின் வழக்கறிஞர், ஆய்வு இயக்குநர் திருவாட்டி சுகிதா நித்தியானந்தன் கூறினார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டிருந்தாலும் இடைவெளிகள் நீடிப்பதாக அவர் கூறினார்.