சுகாதார அறிவியல் ஆணையத்தின் (எச்எஸ்ஏ) சார்பில் அமலாக்க நடவடிக்கைகள் மேற் கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் மூத்த அமலாக்க மேற்பார்வையாளர் ஒருவர், மின்சிகரெட் சோதனைகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் 34 வயது சிங்கப்பூரரான மைக்கல் ஆண்டனி பிள்ளை இன்று (செப்டம்பர் 5) ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டதாக சிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் மின்சிகரெட் தொடர்பில் எச்எஸ்ஏ மேற்கொள்ளும் சோதனைகளின் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு கைமாறாக சுவா வீ மிங்கிடமிருந்து பிள்ளை பல சமயங்களில் 8,000 வெள்ளி வரை லஞ்சம் பெற முயற்சி செய்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கிறது.
ஆறு மில்லியன் வெள்ளிக்கு மேல் மதிப்புடைய மின்சிகரெட் பொருள்களை எச்எஸ்ஏ கைப்பற்றிய சம்பவத்தின் அறிக்கையில் மலேசியரான 34 வயது சுவாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்காக ஆயிரக்கணக்கான மின்சிகரெட்டுகளையும் அவற்றுக்கான கருவிகளையும் சுவா இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் சாதனங்களைக் கொண்டு வருவதற்காக 38 வயது நபரையும் எச்எஸ்ஏ கிடங்கில் உள்ள ஆறு மில்லியன் மதிப்புள்ள பொருள்களைக் கண்காணிக்க மலேசியர் ஒருவரையும் சுவா வைத்திருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மின்சிகரெட்டு பொருள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் செல்ல ஒரு நபரை சுவா நியமித்ததாகவும் அவர், மற்றொரு நபருடன் சேர்ந்து செயல்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டிலிருந்து சுவா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதப் பிற்பகுதியில் வழக்குக்கு முந்திய கலந்துரையாடலுக்கு தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
திரு பிள்ளையைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் யாரும் முன்னிலையாகவில்லை.
அதற்கு அவகாசம் தேவை என்று பிள்ளை கூறியதைத் தொடர்ந்து வழக்கு அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

