ஒப்பந்த அடிப்படையிலான ‘ஐசிஏ’ அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

2 mins read
1e1753c2-6596-4ba9-8ba8-1152f7a3eb95
அலுவல்முறை ரகசியங்கள் சட்டத்தின்கீழ் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ‘செர்ட்டிஸ்’ பாதுகாப்பு அதிகாரிகள் நால்வர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ‘செர்ட்டிஸ்’ பாதுகாப்பு அதிகாரிகள் நால்வர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் மீது, அந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2023 ஜூலை மாதத்திற்கும் இடையில் கிட்டத்தட்ட 7,600 வெள்ளியை அந்த ஆடவர் அவர்களுக்குக் கையூட்டாகத் தந்ததாகக் கூறப்பட்டது.

ஜூரோங் துறைமுகத்தில் கள்ள சிகரெட்டுகள் தொடர்பில் தன் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளாமலிருக்க அவர் லஞ்சம் கொடுத்ததாகத் தெரிகிறது.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8), 34 வயது முகமது சுகைமி கஸாலி மீது அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டது.

அத்துடன், குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான 26 வயது ஸ்ரீ டானியா அப்துல் ரசாக்கிடமிருந்து துவாஸ் சோதனைச்சாவடியில் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்பான ரகசியத் தகவல்களை அவர் பெற்றுக்கொண்டதாகவும் அதற்கு ஈடாக அதிகாரிக்கு $2,190 லஞ்சம் தந்ததாகவும் கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையிலான அமலாக்க நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அவை.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பில் ஒன்றுசேர்க்கப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகள் சுகைமி கஸாலி மீது சுமத்தப்பட்டன.

அலுவல்முறை ரகசியங்கள் சட்டத்தின்கீழ் மேலும் நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார். கூட்டுச் சதியில் உடந்தையாக இருந்தது தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளும் கள்ள சிகரெட்டுகளைச் சேமித்து வைத்திருந்தது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளும் அவற்றைக் கையாண்டது தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அதிகாரி டானியாவுடனும் பெயர் குறிப்பிடப்படாத மற்றொருவருடனும் சேர்ந்து 22 பெட்டிகளிலும் 470 பொட்டலங்களிலும் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யும் சதியில் சுகைமி ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

டானியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளும் சுங்கத்துறையை ஏய்த்து இறக்குமதி செய்யும் கூட்டுச் சதியில் உடந்தையாக இருந்தது தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும் அவற்றைச் சேமித்து வைத்தது தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளும் அலுவல்முறை ரகசியங்கள் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

மற்ற மூன்று அதிகாரிகள் மீது, ஜூரோங் துறைமுகத்தில் அமலாக்க நடவடிக்கை குறித்து சுகைமிக்குத் தகவல் தந்ததாகவும் ஊழல் தொடர்பிலும் தலா இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்