சிங்கப்பூரில் செயல்படும் 1,135 இரட்டை அடுக்கு பேருந்துகளில் புதிய மேம்பட்ட மின்திரைகள் பொருத்தப்படவிருக்கின்றன. 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தப் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பேருந்து எண்களையும் வழித்தடத் தகவல்களையும் பயணிகள் இன்னும் தெளிவாகவும் எளிதாகவும் பார்க்க முடியும்.
வெயில் நேரங்களில் பேருந்துகளின் முன்புறத் திரைகளில் உள்ள தகவல்களை எளிதாகப் பார்க்க முடியவில்லை என்ற குறை பயணிகளிடையே நிலவுகிறது. இந்த நிலையில் பேருந்துகளின் மின்திரைகள் மேம்படுத்தப்படுகின்றன.
இத்திரையில் வழக்கமாகப் பேருந்து சேவை எண், வழித்தடம், சேருமிடம் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
2012, 2017 இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட 1,135 ‘வோல்வோ பி9டிஎல்’ இரட்டை அடுக்கு பேருந்துகளில் 676 பேருந்துகளில் உள்ள பழைய திரைகள் முழுமையாக அகற்றப்பட்டு புதிய திரைகள் பொருத்தப்படவிருக்கின்றன.
அக்டோபர் 20ஆம் தேதியன்று அரசாங்கக் கொள்முதல் இணையத்தளமான ஜிபிஸ்-ல் நிலப்போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரிய வருகின்றன.
எஞ்சிய 459 பேருந்துகளுக்கு முந்தைய பேருந்துகளிலிருந்து அகற்றப்பட்ட திரைகளில் உள்ள செயல்படக்கூடிய பாகங்கள் மறுபயனீடு செய்யப்படும்.
இது, மிகவும் செலவு குறைந்த வழிமுறை என்று ஆணையம் குறிப்பிட்டது.
முதற்கட்டமாக 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் புதிய மின்னிலக்கத் தகவல் பலகைகள் பொருத்தப்படும். இப்பணி 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும்.
இந்தப் பேருந்துகளின் பக்கவாட்டு, பின்புறத் தகவல் பலகைகள் தொடர்ந்து செயல்படும் நிலையில் இருப்பதாக ஆணையம் கூறியது.
வழித்தடத் தகவல்களை ஒரே பார்வையில் படிப்பதற்கும், பேருந்து சேவை எண்ணைக் கவனிப்பதற்கும் சில சமயங்களில் சிரமமாக இருப்பதாகப் பயணிகள் சிலர் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தகவல் பலகைகள் மேம்படுத்தப்படுகின்றனவா என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஆணையம், புதிய திரைகளிலும் தற்போதுள்ள காட்சி அமைப்பே பின்பற்றப்படும் என்று கூறியது.
“ஆனால் பிரகாசத்துடனும் கூடுதல் தெளிவுடனும் இருக்கும்,” என்று ஆணையம் சொன்னது.
