புதிய பட்டதாரிகளுக்கு 2025ல் நல்ல எதிர்காலம்

3 mins read
4382d3c8-57d3-4df9-a8b2-76d4fbdb1fd2
செல்வி ஓங் ஹுய் வென், உளவியலாளர் வேலையும் திரு ஹுவாங் மாவோஹன் கப்பல் பட்டறையில் இயந்திரங்களை இயக்கும் வேலையும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய பட்டதாரிகளுக்கு 2025ஆம் ஆண்டு நல்ல எதிர்காலத்தைத் தரும் என நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் வாழ்க்கைத் தொழிலைத் தொடங்க விரும்பும் புதிய பட்டதாரிகளுக்கு தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மை, சந்தைமயப்படுத்தல், சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் அதிகரித்துவரும் வேலை வாய்ப்புகள் இருப்பதாக வாழ்க்கைத் தொழில் மற்றும் ஆள்சேர்ப்பு நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளனர்.

ஏடிபி (ADP) எனும் ஊதியம் மற்றும் மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டார மூத்த உதவி தலைவர் திருவாட்டி ஜெசிக்கா ஷாங்கும் ‘மேன்பவர்குருப் சிங்கப்பூர்’ (ManpowerGroup Singapore) நிறுவனத்தின் சிங்கப்பூருக்கான நிர்வாகி திருவாட்டி லிண்டா டியோவும் பசுமை எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் புதிய பட்டதாரிகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று கூறியிருக்கின்றனர்.

“சிங்கப்பூர், உலகளாவிய தொழில்நுட்ப மையமாக இருக்க விரும்புகிறது. அது மட்டுமல்லாமல் பசுமைத் திட்டம் 2023 இலக்குகள், மூப்படையும் மக்கள்தொகை போன்றவை வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். இதன் தொடர்பில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், இணையப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொலை மருத்துவம் உள்ளிட்ட பணிகளில் புதிய பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்,” என்று திருவாட்டி ஷாங் கூறினார்.

இவ்வாண்டு இண்டீட் (Indeed) வேலை வாய்ப்பு இணையத்தளத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான வேலை வாய்ப்புகள் அதிகம் இடம்பெற்று இருந்தன.

2023ஆம் ஆண்டு நவம்பருக்கும் 2024ஆம் ஆண்டு நவம்பருக்கும் இடையே அவை 127 விழுக்காடு வளர்ச்சி கண்டன என்று இண்டீட் வாழ்க்கைத் தொழில் ஆலோசகரான சௌமித்ரா சந்த் கூறினார்.

இதற்கு அடுத்ததாக அதே காலகட்டத்தில் இயந்திரக் கற்றல் (Machine Learning) பணிகளுக்கான வாய்ப்புகள் 83 விழுக்காடு கூடியது. மின்னிலக்க சந்தைப்படுத்தல் பணிகளில் 58 விழுக்காடு வாய்ப்புகள் கூடின.

சிங்கப்பூர் தொடர்ந்து மின்னிலக்கமயமாக்கலையும் மின்வர்த்தக முயற்சிகளையும் ஊக்குவிப்பதால் புதிய பட்டதாரிகளுக்கு இயந்திரக் கற்றல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பணிகளில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக திரு சந்த் மேலும் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் சந்தைப்படுத்தல் உதவியாளராக பணியில் சேர்ந்தால் ஆரம்பக்கால ஊதியமாக மாதம் $2,500 முதல் $3,500 வரை எதிர்பார்க்கலாம் என்று ஆள்சேர்ப்பு நிறுவனமான பெர்சோல்கெல்லியின் (Persolkelly) 2024-2025ஆம் ஆண்டுக்கான சம்பள வழிகாட்டி தெரிவிக்கிறது.

இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு வேலைகளுக்கான ஊதியம் பட்டதாரிகளுக்கு மாதம் $4,500 முதல் $6,000 வரையிலும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு $4,500 முதல் $5,000 வரையிலும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று மேன்பவர் குருப் கூறுகிறது.

தரவு அறிவியல் வேலைகளுக்கு ஆரம்பச் சம்பளம் பட்டதாரிகளுக்கு மாதம் $4,000 முதல் $5,000 வரையிலும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு $4,000 முதல் $4,500 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

பசுமை எரிசக்தி துறையில் புதிய பட்டதாரிகளுக்கு மாதம் $3,500 முதல் $5,500 வரையில் வருமானம் ஈட்ட முடியும் என்று மேன்பவர் குருப் மேலும் கூறியது.

வாழ்க்கைத் தொழில் சேவை நிறுவனமான அவோடா பீப்பிள் சொல்யூஷன் திட்ட இயக்குர் ஜெரால்ட் டான், தொழில்நுட்பம் மற்றும் நீடித்த நிலைத்தன்மையில் உள்ள வேலை வாய்ப்புகளைத் தவிர மூப்படையும் மக்களாலும் மக்கள் நல்வாழ்வு தொடர்ந்து வலியுறுத்தப்படுவதாலும் அதன் தொடர்பில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

2025ல், இளம் ஊழியர்களை ஈர்க்க நிறுவனங்கள் பரந்த அளவிலான அணுகூலன்களை வழங்க முன்வரும். இதையும் புதிய பட்டதாரிகள் பெரிதும் எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்