பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் ஆண்டுதோறும் நடைபெறும் ‘எர்த்ஷாட் விருது’ நிகழ்ச்சிக்காக அடுத்த மாதம் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வார் என கென்சிங்டன் மாளிகை தெரிவித்துள்ளது.
அதில் சுற்றுப்புறப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஐந்து வெற்றியாளர்கள் £1 மில்லியனைப் (S$1.67 மி.) பெறுவார்கள்.
நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் விருது நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் அரசர் சார்ல்ஸின் மூத்த மகனான இளவரசர் வில்லியமுடன் கொள்கை ஆர்வலர்கள், கொள்கை வகுப்பவர்கள், புத்தாக்கத் திறனாளர்கள் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.
நான்கு நாள் பயணத்தின்போது இளவரசர் வில்லியம் வர்த்தகங்களுடனும் முதலீட்டாளர்களுடனும் தொடர்ந்து சில நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களும் வெற்றியாளர்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இளவரசர் வில்லியம் வனவிலங்கு உலக மாநாட்டிலும் கலந்துகொள்வார்.
அவர் கடைசியாக சிங்கப்பூர் வந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.