சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் அடாவடி செய்ததாக பிரிட்டி‌‌ஷ் ஆடவர் மீது குற்றச்சாட்டு

சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் அடாவடி செய்ததாக பிரிட்டி‌‌ஷ் ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
80d64092-bbb8-4095-80ac-86af3c377905
ஜூலை 20ஆம் தேதி கோலாலம்பூருக்கான விமானம் 45 நிமிடங்கள் தாமதமாய்ப் புறப்பட்டதன் தொடர்பில் பயணி ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சாங்கி விமான நிலையத்தில் போதையில் இடையூறு செய்து விமானம் 45 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படுவதற்குக் காரணமான பயணி ஒருவர் மீது பொதுத்தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற அருட்செல்வன் கர்ணன், 25, எனும் அந்த ஆடவர் மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 12) ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இவற்றில் இரண்டு குற்றச்சாட்டுகள் துன்புறுத்தல் தொடர்பாகவும் எஞ்சிய மூன்று குற்றச்சாட்டுகள் போதையில் பொது இடத்தில் தொல்லை கொடுத்தது, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தது, காயம் விளைவித்தது தொடர்பாகச் சுமத்தப்பட்டன.

நீதிமன்ற ஆவணங்களின்படி, ஜூலை 20ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு ‘கேட் சி17’ அருகில் அருட்செல்வன் போதையில் கூச்சலிட்டு, சுற்றியிருந்தோருக்குத் தொந்தரவு கொடுத்தபோது சம்பவம் தொடங்கியது.

பிற்பகல் மணி 3.50க்கு, விமான நிலையப் பெண் ஊழியர் ஒருவரிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசி, அந்தப் பெண்ணை இனவெறியர் என்று குற்றஞ்சாட்டி அருட்செல்வன் அவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மாலை மணி 4.05க்கு, ஸ்கூட் விமானத்திலிருந்து அவர் இறக்கப்படவுள்ளார் என்று கூறப்பட்டதை அடுத்து, அருட்செல்வன் விமான இணைப்புப் பாலத்திற்குள் முரட்டுத்தனமாய்ச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அங்கிருந்த மற்றொரு பெண் ஊழியரைத் தள்ளிவிட்டு, கீழே விழச்செய்து அவருக்குக் காயத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர் சிங்கப்பூரையும் மலேசியாவையும் குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளால் வசைபாடினார்.

அவரின் செயலால் கோலாலம்பூருக்கான விமானம் 45 நிமிடங்கள் தாமதமாய்ப் புறப்பட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 11 தெரிவித்தது.

தற்போது அருட்செல்வனின் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டு $1,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது இடத்தில் போதையில் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அருட்செல்வனுக்கு $1,000 வரை அபராதமும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

மிரட்டும், வசைபாடும் அல்லது அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்தியது அல்லது நடந்துகொண்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக அவருக்கு $20,000 வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்
சாங்கி விமான நிலையம்ஊழியர்சட்ட விரோதம்குற்றச்சாட்டுதண்டனை