தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துடிப்புடன் மூப்படைய $3.5 பில்லியன் திட்டம்

2 mins read
e9886ccb-d9a9-4582-acad-8fbbaf3ddd55
படம்: - தமிழ் முரசு

அடுத்த பத்தாண்டுகளில் ‘ஏஜ்வெல் எஸ்ஜி’ எனும் துடிப்பான முதுமைக்காலத் திட்ட நடவடிக்கைகளுக்காக $3.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் துடிப்புடன் நடமாடவும், பராமரிப்புத் தெரிவுகளை எளிதில் அணுகவும், சமூகத்தில் அதிக தற்சார்புடன் வாழவும் அவை உதவும்.

தேசிய அளவிலான இந்தப் புதிய ‘ஏஜ்வெல் எஸ்ஜி’ திட்டத்தின்கீழ், உடற்பயிற்சி நடவடிக்கைகள், தொண்டூழிய வாய்ப்புகள் உள்ளிட்ட அதிக நடவடிக்கைகள் இருக்கும் வகையில் துடிப்பான முதுமைக்கால மன்றங்கள் விரிவுபடுத்தப்படும்.

மூத்த குடிமக்கள் தற்சார்புடன் மூப்படைய உதவும் வகையில், சமூகப் பராமரிப்பு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும்; மேம்பட்ட இல்லப் பராமரிப்பு ஏற்பாடுகள் இடம்பெறும்.

அத்துடன், நோய் நீக்கும் நலத்தோட்டங்கள், தடுப்பில்லாச் சரிவுப்பாதைகள், அகன்ற நுழைவாயிலுடன் கூடிய கழிவறைகள், குளியல் இருக்கைகள் என மூத்தோருக்கு உகந்த வீட்டு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

கூரையுடன் கூடிய அதிகமான நடைபாதைகள், மூத்தோருக்கு உகந்த பேருந்து நிறுத்தங்கள், சாலைகள் உள்ளிட்ட பயணிகளுக்கான உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்படும்.

வரவுசெலவுத் திட்ட அறிக்கைத் தாக்கலின்போது இதனை அறிவித்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சுகாதாரப் பராமரிப்பு கட்டுப்படியாகும் வகையிலும் எளிதில் கிடைப்பதையும் உறுதிப்படுத்த சிங்கப்பூர் மிகுதியாக முதலீடு செய்துள்ளதாகக் கூறினார்.

இப்போது சிங்கப்பூரர்களில் ஐவரில் ஒருவர் 65 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கிறார். இவ்விகிதம் 2030ஆம் ஆண்டில் நால்வரில் ஒருவர் எனும்படியாக இருக்கும்.

சிங்கப்பூரர்கள் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கவும் முதுமைக்காலத்திற்கான மருத்துவச் சேமிப்புகளைப் பெருக்கவும் ஒருமுறைக்கான மெடிசேவ் போனஸ் வழங்கப்படும்.

அதன்படி, 21 முதல் 50 வயதிற்குட்பட்ட சிங்கப்பூரர்களின் மெடிசேவ் கணக்கில் $300 வரை பணம் நிரப்பப்படும். 51 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் மெடிசேவ் கணக்கில் $750 முதல் $1,500 வரை நிரப்பப்படும்.

சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் வகையில், சுகாதார அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் பல்வேறு திட்டங்களுக்கும் சேவைகளுக்குமான வருமான வரம்புகளை மாற்றியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்