வரவுசெலவுத் திட்டம் 2025ல் முதியோருக்கு அளிக்கப்படும் அனுகூலங்களை அவர்கள் பயன்படுத்தும்படி செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் ஊக்குவித்துள்ளார்.
தகுதிபெறும் குறைந்த வருமான முதியவருக்கு வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான மெடிசேவ் இணை நிதித்திட்டத்தை பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) பிற்பகல் அறிவித்ததைச் சுட்டினார் திரு விக்ரம்.
இந்தத் திட்டத்தின்படி, விருப்பத்தின்பேரில் தங்களது மெடிசேவ் கணக்கை நிரப்பும் மூத்தோருக்கு வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான வழங்கீட்டுத் தொகையை அரசாங்கம் அவர்களது கணக்கில் சேர்க்கும்.
இதற்குத் தகுதிபெற, மூத்தோர் 55 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டிருக்கவேண்டும். அத்துடன் அவர்களது சராசரி மாதாந்திர வருமானம், $4,000ஐ தாண்டக்கூடாது.
வரவுசெலவுத் திட்ட உரைக்குப் பின்னர் நாடாளுமன்றக் கட்டடத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு விக்ரம், குறைந்த வருமான முத்தோரில் சிலர் திறன்பேசியைப் பயன்படுத்த இன்னமும் தெரியாமல் இருப்பதால் அவர்கள் இது போன்ற அனுகூலங்களைப் பெறவும் பயன்படுத்தவும் தவறக்கூடும் என்று குறிப்பிட்டார்.
“வரவுசெலவுத் திட்ட சலுகைகளைப் பயன்படுத்த சில்வர் ஜெனரேஷன் எனப்படும் மூத்தத் தலைமுறை அலுவலகங்களுக்கு முதியவர்கள் சென்று திறன்பேசிகளின் மூலம் எப்படி சலுகைகளைப் பெறவேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதலைப் பெறுகின்றனர். இது அவ்வளவு கடினமானது அல்ல,” என்று திரு விக்ரம் கூறினார்.
வரவுசெலவுத் திட்ட உரையின்போது அறிவிக்கப்பட்ட கூடுதலான சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள், எஸ்ஜி 60 வழங்கீட்டுத் தொகை ஆகியவற்றின்மூலம் மக்கள், கூடுதலான அரசாங்க ஆதரவைப் பெற முடியும் என்பதையும் திரு விக்ரம் நினைவூட்டினார்.
பிள்ளைப் பராமரிப்பு குறித்து அறிவிக்கப்படும் கொள்கைகளால் குறைந்த வருமான இந்தியக் குடும்பங்களின் பாலர்ப் பள்ளிக்கான செலவு குறையப்போகிறது என்பதையும் திரு விக்ரம் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இவற்றுடன் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் மூலமாக பிள்ளைகளை வளர்ப்பதற்கான செலவு குறையும்,” என்று அவர் கூறினார்.
“இத்திட்டத்தில் குடும்பங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, குறைந்த வருமான குடும்பங்களுக்கு வீடு வாங்குவதற்குக் கூடுதல் உதவி தரப்படவுள்ளது. எல்லாருக்கும் சொந்த வீடு கிடைக்க மேலும் சுலபமாக உள்ளது,” என்றார் திரு விக்ரம்.
சிங்கப்பூரில் தற்போது 20 மூத்த தலைமுறை அலுவலகங்கள் உள்ளன.
2025 நிதியாண்டில் நிறுவனங்களுக்கு 50 விழுக்காடு வரித் தள்ளுபடி சிறிய நடுத்தர நிறுவனங்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதையும் திரு விக்ரம் சுட்டினார்.
“இந்திய நிறுவனங்களில் பெரும்பகுதி இத்தகைய நிறுவனங்கள் என்பதால் இந்த அறிவிப்பின்மூலம் நம் சமூகத்தினர் பயனடைவர்,” என்று திரு விக்ரம் குறிப்பிட்டார்.
இந்தியக் கலைக்குழுக்களும் கலை நிறுவனங்களும் எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகை மூலம் பயன்பெறலாம் என்பதையும் அவர் கூறினார்.

