இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் தாராளமானது எனக் கருதப்பட்டால், அதற்கு அரசாங்கம் நிதி நிலையைப் பொறுப்பாகவும் சிறப்பாகவும் கையாண்டதனாலேயே எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்
தமது சமூக ஊடகப் பக்கங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) அவர் வெளியிட்ட ஒன்றே முக்கால் நிமிடக் காணொளியில், பிப்ரவரி 18ஆம் தேதி வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து தமக்குக் கிடைத்த நான்கு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் தேர்தல் பட்ஜெட்டா என்பது குறித்து அவர் பேசினார். அரசாங்கத்தின் ஆக அண்மைய செலவினத் திட்டம், பொதுத் தேர்தல் நடக்கும் ஆண்டுடன் ஒத்திருப்பதே உண்மை என்றார் அவர்.
அரசாங்கம் அதன் வளங்களைச் சரிவரக் கையாண்டதனாலும் சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் தன்னால் ஆன அனைத்தையும் செய்வதனாலும் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பலதரப்பட்ட ஆதரவுத் திட்டங்களை அரசாங்கத்தால் வழங்க முடிந்ததாக பிரதமர் வோங் விளக்கினார்.
நிதி அமைச்சருமான பிரதமர் வோங், வரவுசெலவுத் திட்டத்தில் வெளியான ஆதரவுத் திட்டங்கள் தற்காலிகமானவையா என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.
“பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களில் அதிக கவனம் இருப்பது பற்றி எனக்குத் தெரியும். ஆனால், எஸ்ஜி60 தொகுப்புத் திட்டத்தையும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிப்பதற்கான ஆதரவுத் திட்டங்களையும் நீங்கள் பார்த்தீர்களானால், எங்களது ஒட்டுமொத்த பட்ஜெட்டில் அவை ஏறக்குறைய 5 விழுக்காடு மட்டுமே பங்கு வகிக்கின்றன,” என்றார் பிரதமர் வோங்.
ரொக்கத்துக்குப் பதிலாக ஏன் பற்றுச்சீட்டுகள் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். வரவுசெலவுத் திட்டத்தில் ரொக்க ஆதரவுத் திட்டங்களும் இருப்பதாகச் சொன்ன அவர், சிடிசி பற்றுச்சீட்டுகளை வழங்குவதில் நாட்டிற்கு சில ஆண்டுக்காலம் அனுபவம் இருப்பதன் அடிப்படையில், ரொக்கத்திற்குப் பதிலாக எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளை வழங்க அரசாங்கம் முடிவெடுத்ததாகக் கூறினார்.
சிடிசி பற்றுச்சீட்டுகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பற்றுச்சீட்டு வடிவில் ஆதரவளிப்பதால் குடியிருப்புப் பேட்டைகளில் இயங்கும் வணிகங்கள் பலனடைவதாகவும் பிரதமர் வோங் சொன்னார்.

