தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரவுசெலவுத் திட்டம் 2025: சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் பரிந்துரைகள்

2 mins read
21cdd901-8d35-43f7-89f3-04e486092f92
2025 வரவுசெலவுத் திட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் வர்த்தகத் தலைவர்களுடன் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபை கலந்துரையாடல் ஒன்றை அண்மையில் நடத்தியது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் வர்த்தகத் தலைவர்களுடன் சேர்ந்து சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபை கலந்துரையாடல் ஒன்றை அண்மையில் நடத்தியது.

இதில், இந்திய வர்த்தகச் சமூகத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் மற்ற முக்கியப் பங்குதாரர்களும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய கருத்துகள் சேகரிக்‌கப்பட்டன.

சந்திப்புகள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சொத்துகள் துறை, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), இந்திய உணவகங்கள் சங்கம் உட்பட பல்வேறு துறைகளையும் சங்கங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் நவம்பர் 4ஆம் தேதி ஒன்றுகூடி தங்கள் நுண்ணறிவுகளை வழங்கினர்.

நிலைத்தன்மை முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தேவைப்படுகிறது என்ற கருத்து கலந்துரையாடலில் முன்னின்றது.

2024 வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிசக்தி சிக்கனத்திறன் மானியத்திற்கு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நன்றி கூறின. மேலும், பொருளியல், சுற்றுச்சூழல் நன்மைகளை எடுத்துக்‌காட்டி, நிலைத்தன்மை முயற்சிகளை முன்னெடுப்பதற்காக ஊக்கத்தொகையை அரசாங்கம் அதிகரிக்‌க அவை வேண்டுகோள் விடுத்தன.

குறிப்பாக, லிட்டில் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான செலவு அதிகரித்திருப்பது குறித்து இந்திய வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர்.

அதிக வாடகை, வர்த்தக நெருக்கடி முதலிய காரணங்களால் லிட்டில் இந்தியாவில் உள்ள பல நன்கு அறியப்பட்ட இந்திய மரபுடைமை சார்ந்த வர்த்தகங்கள் மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் சுட்டிக்‌காட்டப்பட்டது. இதுபோன்ற முக்‌கிய நிறுவனங்களைப் பாதுகாக்க வாடகைக் கட்டணங்களை நிலைநிறுத்துமாறு அரசாங்கத்திடம் வர்த்தக, தொழிற்சபை பரிந்துரைத்தது.

அதிகரிக்கும் செலவுகளால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பகுதிநேர ஊழியர்களை நாட வேண்டிய நிலைமை முன்னிலைப்படுத்தப்பட்டது. இது வேலை பாதுகாப்பைப் பாதிக்‌கலாம் என்பதால், முழுநேர ஊழியர்களைப் பணியமர்த்த அரசாங்கம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சந்திப்புகள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் தொழில்துறைக்கு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மேலும் ஆதரவளிக்க வேண்டும், சம்பள உதவித்தொகைத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்‌குக் கூடுதல் நீக்குப்போக்கு அளிக்‌க வேண்டும் போன்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

கலந்துரையாடலில் சேகரிக்‌கப்பட்ட கருத்துகள் நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்