ஊழியர் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் சலுகை வழங்குவது, வாடகை அளவுக்கதிகமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த சட்டங்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு சிங்கப்பூர் உணவகங்கள் சங்கம் (ஆர்ஏஎஸ்) நிதி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாகப் படிப்படியான சம்பள உதவித் திட்டத்தின்கீழ் (பிடபிள்யுசிஎஸ்) வழங்கப்படும் சலுகைகளை இவ்வாண்டிலிருந்து 2028ஆம் ஆண்டு வரை தற்போதிருக்கும் 50 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காட்டுக்கு உயர்த்துமாறு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான தீர்வைகளை விலக்குவது, பிடபிள்யுசிஎஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசாங்க நிதியுதவிக்குக் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பது, மகப்பேற்று விடுப்பில் செல்லும் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கக் கூடுதல் நிதியுதவி போன்ற பரிந்துரைகளையும் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தை முன்னிட்டு சங்கம் முன்வைத்துள்ளது.
அதிகரிக்கும் செலவுகள், ஊழியர் பற்றாக்குறை, மாறிவரும் வாடிக்கையாளர் பழக்கங்கள் போன்ற சவால்களை உணவு, பானத் துறை தொடர்ந்து எதிர்நோக்கிவரும் சூழலில் இத்துறையில் செலவுக் கணிப்பை மேம்படுத்துவது, உள்ளூரில் தேவையைத் தூண்டுவது போன்றவற்றில் அரசாங்கத்தின் உதவியை உணவகங்கள் சங்கம் நாடுகிறது. திங்கட்கிழமை (ஜனவரி 19) செய்தி அறிக்கையில் சங்கம் இத்தகவல்களைத் தெரிவித்தது.
கடந்த 2024ஆம் ஆண்டில் உணவு, பானத் துறை சுருங்கியது. வரலாறு காணாத எண்ணிக்கையில் உணவு, பானக் கடைகளை மூட நேரிட்டது. அதனால், நீண்டகாலத்தில் உணவு, பான வர்த்தகங்கள் தொடர்ந்து செயல்படுவது, அதிலும் குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயல்படுவது அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகச் சங்கம் சுட்டியது.
பிடபிள்யுசிஎஸ் திட்டத்தின்கீழ், 2022லிருந்து 2026ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் படிப்படியான சம்பள உயர்வு முறையில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும்போது அரசாங்கமும் அதற்கு நிதி வழங்கி உதவும் (co-funds). சம்பள உயர்வு அளிக்கும்போது நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்படி அரசாங்கம் வழங்கும் நிதியுதவி 2024ஆம் ஆண்டுக்கென 30லிருந்து 50 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும் என்று அந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தற்போதைய பிரதமரும் அன்றைய நிதி அமைச்சரும் துணை அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தார்.
பிடபிள்யுசிஎஸ் நிதியுதவி தற்போது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

