வரவுசெலவுத் திட்டம் 2026: நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட ஆதரவுகள் வழங்கப்படக்கூடும்

வரவுசெலவுத் திட்டம் 2026: நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட ஆதரவுகள் வழங்கப்படக்கூடும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

10 Feb 2026 - 9:21 pm

2 mins read

வரவுசெலவுத் திட்டம் 2026ல் நிறுவனங்கள், பரந்த அடிப்படையிலான உதவிகளுக்குப் பதிலாக, குறிப்பிட்ட உத்திபூர்வ ஆதரவை எதிர்பார்க்கலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

உலக அளவில் நிலவும் பொருளியல் நிச்சயமற்ற சூழலையும் அரசியல் பதற்றத்தையும் கையாள அது உதவும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), அனைத்துலகமயமாக்கல், நீடித்த நிலைத்தன்மை, செலவு நிர்வாகம் முதலிய துறைகளில் அரசாங்க ஆதரவு கூடுதலாகத் தேவைப்படும் என்று கவனிப்பாளர்கள் குறிப்பிட்டனர். நிறுவனங்கள் அந்தத் துறைகளில் மீள்திறனுடனும் போட்டித்தன்மையுடனும் திகழ்வதற்கு ஏதுவாக ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள உதவுவதில் கவனம் செலுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக ஏற்கெனவே இருப்பவை விரிவுபடுத்தப்படக்கூடும் அல்லது நீட்டிக்கப்படக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏஐ, அனைத்துலகமயமாக்கல், செலவு நிர்வாகம் முதலியவற்றில் கூடுதல் உதவிகளைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவிப்பார் என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை இணைப் பேராசிரியர் யூஜின் டான் எதிர்பார்க்கிறார். நிறுவனங்கள் அவற்றில் கணிசமான, தேவையான முன்னேற்றம் காணும் என்பதை உறுதிசெய்ய அத்தகைய உதவிகள் அவசியம் என்று அவர் கருதுகிறார்.

உலகளாவிய போட்டித்தன்மை, தொழில்நுட்பம், தொழில்முனைப்பு, மனித மூலதனம், பொருளியல் மறுசீரமைப்பு முதலியவற்றின் தொடர்பில் பொருளியல் உத்திபூர்வ மறுஆய்வுக் குழுக்கள் அண்மையில் பல பரிந்துரைகளை முன்வைத்திருந்தன. இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் அவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்ற விவரங்களை அரசாங்கம் வெளியிடக்கூடும் என்று ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியலாளர் செலினா லிங் தெரிவித்தார்.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம், சிங்கப்பூரின் பொருளியல் மீள்திறனை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார் டெலாய்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் வரி, சட்டப் பிரிவுத் தலைவர் ரோஹான் சோலாபுர்கர்.

வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) பிற்பகல் 3.30 மணிக்குப் பிரதமர் வோங், இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

குறிப்புச் சொற்கள்