வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள வரவுசெலவுத் திட்டம் 2027ஐ முன்னிட்டு, சிங்கப்பூரர்கள் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் ஜனவரி 6ஆம் தேதிவரை சமர்ப்பிக்கலாம்.
2027 ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் 2028 மார்ச் 31ஆம் தேதிவரையிலான எதிர்வரும் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் நிதிக் கொள்கையையும் செயல்படுத்தப்படவுள்ள நிதி நடவடிக்கைகளையும் சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் கோடிகாட்டுகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட அரசாங்க வருவாய், செலவினக் கணிப்புகளையும் எதிர்வரும் நிதியாண்டுக்கான மதிப்பீடுகளையும் அது உள்ளடக்குகிறது.
பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படுவதாக நிதி அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 12) அறிவித்தது. மூன்று முக்கியக் கருப்பொருள்களின்கீழ் குடிமக்கள், வர்த்தகங்கள், அமைப்புகளிடமிருந்து அது கருத்துகளை நாடுகிறது.
சிங்கப்பூரின் பொருளியல் மீள்திறனையும் போட்டித்தன்மையையும் வலுப்படுத்துதல், சிங்கப்பூர் ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்தல், சிங்கப்பூரர்களுக்கு அதிக உத்தரவாதத்தை வழங்குதல் ஆகியவையே அவை.
சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்ட இணையத்தளம் (go.gov.sg/mofbudget2027), கீழ்க்காணும் ‘ரீச்’, மக்கள் கழக இணையவாசல்கள் ஆகியவற்றின் வழியாகப் பொதுமக்கள், கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம்.
- ரீச் வரவுசெலவுத் திட்டம் 2027 குறுந்தளம் (go.gov.sg/reach-budget-2027)
- ரீச் சிங்கப்பூர் ஃபேஸ்புக் பக்கம் (facebook.com/REACHSingapore)
- ரீச் சிங்கப்பூர் இன்ஸ்டகிராம் பக்கம் (instagram.com/reachsg)
- மக்கள் கழகத்தின் ‘ஷேர்யோர்வியூஸ்’ (PA ShareYourViews) இணையப்பக்கம் (go.gov.sg/pasyv2027)
களத்தில் இறங்கிப் பொதுமக்களின் கருத்துகளைச் சேகரிக்க, அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான ‘ரீச்’, வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய நேரடிக் கருத்துக்கேட்புக் கூடத்திற்கும் ஏற்பாடு செய்யவிருக்கிறது. அதற்கான தேதிகள், இடங்கள் குறித்த விவரங்கள் பின்னர் அதன் சமூக ஊடகத் தளங்களில் அறிவிக்கப்படும்.
மக்கள் கழகமும் அதன் அடித்தள அமைப்புகளும் தீவு முழுதும் உள்ள குடியிருப்புப் பேட்டைகளில் நடத்தப்படும் ‘ஷேர்யோர்வியூஸ்’ கலந்துரையாடல்கள் மூலமாகவும் இணையவழிச் சமூகத் தளங்கள் மூலமாகவும் பொதுமக்களின் கருத்துகளையும் யோசனைகளையும் சேகரிக்கவுள்ளன. அதற்கான கால அட்டவணை மக்கள் கழக இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
