செயற்கை நுண்ணறிவை மையப்படுத்தும் வரவுசெலவுத் திட்டம்: கல்வியாளர்கள்

செயற்கை நுண்ணறிவை மையப்படுத்தும் வரவுசெலவுத் திட்டம்: கல்வியாளர்கள்

3 mins read
741f8bb9-4328-4c3b-b081-91d502b81dbc
காந்த அதிர்வு இயந்திரங்கள் (MRI) பற்றிய ஆராய்ச்சிக்காக உருவாக்கிய மாதிரியுடன் அனிருத். - படம்: அனிருத் 

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், உயர்கல்வி நிலையங்களிலும் ஊழியரணியிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த புரிதலை வலுப்படுத்தவுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார். 

இம்முயற்சிகளைக் கல்வித்துறையினர் வரவேற்றுள்ளனர்.

“சிங்கப்பூரின் வருங்காலப் பொருளியல் உருமாற்றத்துக்கு ஏஐ மைய சக்தியாக இருக்கும். பல்கலைக்கழகப் பாடங்களைத் தயார்ப்படுத்தவும் மாணவர்களைத் தனிப்பட்ட முறையில் சென்றடையவும் ஏஐ உதவும். அதே நேரம், தொழில்துறைக்கு ஏற்றாற்போல் பாடத்திட்டங்களை வடிவமைக்கவும் கைகொடுக்கும்,” என்றார் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக (எஸ்யுடிடி) இணைப் பேராசிரியர் மோகன் இராஜேஷ் இலரா.

வரவுசெலவுத் திட்டம் 2026, சிறிய, நடுத்தர வர்த்தகங்களை ஆதரிப்பதில் பல்கலைக்கழகங்களின் ஆற்றலை மேம்படுத்துவதாகவும் அவர் கூறினார். 

தற்போது எஸ்யுடிடி, சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்குப் பயிற்சி வழங்குவதாகவும் நிறுவனங்களிலேயே ஏஐ மூலம் வடிவமைப்பு சார்ந்த வசதிகளை அமைப்பதாகவும் கூறிய அவர், இம்முயற்சிகளின் விரிவாக்கத்துக்கு தேசிய ‘ஏஐ’ கொள்கைகள் துணைபுரியும் என்றார்.

“சிங்கப்பூரின் மிகப்பெரிய வெற்றிக் கதைகளில் ஒன்று, பல்கலைக்கழகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் வழங்கும் ஆதரவு. இதன்மூலம், பல்கலைக்கழகங்களில் சோதிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களுக்கு நிறுவனங்கள் உரிமங்கள் எடுத்து சந்தைப்படுத்தலாம்; அரசாங்க நிதியுதவியுடன் இணை முதலீடு செய்யலாம். வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்,” என்றார் பேராசிரியர் மோகன்.

“அரசாங்கம் ஏஐக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தால் பெரிய பன்னாட்டு நிறுவனங்களும் சிங்கப்பூருக்கு ஈர்க்கப்படுகின்றன, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன,” என அவர் கூறினார்.

“பல்வேறு அமைச்சுகளும் ஏஐ சார்ந்த முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதால், இது நம் பொருளியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏஐ தீர்வுகளையும் பாதுகாப்புச் செயல்முறைகளையும் சிங்கப்பூர் முழுதும் வலுப்படுத்தி மற்ற நாடுகளுக்குக் கொண்டுசெல்லலாம்,” என அவர் கூறினார்.

‘மதிப்பெண்களைவிடப் புத்தாக்கமே முக்கியம்’

இளம்வயதிலேயே ஏஐயில் பரந்துபட்ட அனுபவம் கொண்ட இரண்டாமாண்டுப் பட்டப்படிப்பு மாணவர் ர அனிருத், 23, பல்கலையின் ‘டிசைன் ஏஐ ஃபேப்லேப்’ ஆராய்ச்சிக்கூடத்தில் பல முயற்சிகளை முன்னெடுத்துவருகிறார். சென்ற ஆண்டு (2025) தொடக்கக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏஐ மூலம்  பொருள்களை உருவாக்கும் முறையைக் கற்பித்தார். அனிருத் உருவாக்கிய ‘ஜிபிடிபர்னி’, ‘ஜிபிடிபிரோஃப்’, ‘எஸ்யுடிடி விக்கி’ ஆகிய ஏஐ சேட்போட்கள், மாணவர்களின் கல்விப்பயணத்தில் கைகொடுக்கின்றன. 

“ஏஐ உதவியோடு வேகமாகக் கற்றுக்கொள்ளமுடிவதால் கல்விமுறையும் மாறவேண்டும். நாங்கள் இப்போது ‘சிறப்புத் திட்டங்கள்’ எனும் பாடத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்துவருகிறோம். அதாவது வழக்கத்தைவிடக் கடினமான சவாலை எடுத்து ஏஐ மூலம் அதற்குத் தீர்வுகாணமுடியுமா? எனப் பார்க்கிறோம்” என்றார் அனிருத்.

“மாணவர்களின் திறன்களைத் தேர்வு மூலம் மதிப்பிடாமல் ஏஐ உதவியுடன் தனிப்பட்ட பயன்பாட்டு முறையில் மதிப்பிட முடியுமா?” என்ற கேள்வியையும் தம் குழு ஆராய்வதாக அவர் கூறினார். “எஸ்யுடிடி ஆராய்ந்துவரும் மற்றொன்று, ஏஐ பயன்பாட்டைக் கட்டாயப்படுத்துதல். அதாவது, ஏஐயிடம் கேட்ட கேள்விகளையும் அதன் பதில்களையும் குறித்த கருத்துகளையும் மாணவர்கள் பகிரவேண்டும்,” என்றார் அனிருத்

“மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது நல்லதுதான். ஆனால் $100,000 சேமித்துத் தரும் கருவியை என்னால் உருவாக்க முடிந்தால் அது அதைவிடச் சிறந்தது,” என அவர் கூறினார்.

நிறுவனங்களுக்கும் ஊழியரணிக்கும் அறிவிக்கப்பட்ட முயற்சிகளையும் அனிருத் வரவேற்றார்.

“ஏஐ செலவினங்களுக்கான புதிய வரி விலக்குகளும் ஏஐ புத்தாக்கங்களைப் பாதுகாப்பாகச் சோதித்துப் பார்க்க நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள அனுகூலங்களும் நல்ல முயற்சிகள். அவை, அதிக ஆற்றல்வாய்ந்த ஏஐ கருவிகளைப் பயன்படுத்த நிறுவனங்களை ஊக்குவிக்கும்,” என்று அவர் சொன்னார்.

“ஏஐ வேகமாக மாறிவருகிறது. அதற்கு ஈடுகொடுத்து மாறுவதே நமக்கு இருக்கும் பெருஞ்சவால்,” என்றார் அனிருத்.

குறிப்புச் சொற்கள்