தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஏறக்குறை 60 கிலோ மீட்டர் பாதைகள் 2029க்குள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

புக்கிட் மேரா, புக்கிட் தீமா, காலாங், நகர மையத்தில் புதிய சைக்கிள் பாதைகள்

3 mins read
f315fe1e-a799-4a89-89cc-f12a9f86f01e
ஓவியரின் கைவண்தில் புக்கிட் மேரா வட்டாரம், அலெசாண்டிரா ரோட்டில் அமையவுள்ள புதிய சைக்கிள் பாதை. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

புக்கிட் மேரா, புக்கிட் தீமா, காலாங், நகர மையம் ஆகிய பகுதிகளில் சைக்கிள் ஓட்டுபவர்கள் 2029ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 60 கிலோ மீட்டர் சைக்கிள் பாதையில் சவாரி செய்யலாம்.

புதிய உள்கட்டமைப்புக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

புதிய பாதைகளில், சைக்கிளுக்கு மட்டுமேயான தனி பாதைகளும் பகிரப்பட்ட பாதைகளும் இடம்பெறும். சில பகுதிகள் கூரைவேயப்பட்டதாக இருக்கும்.

பொதுவாக சிவப்புக் கோடுகளால் குறிக்கப்பட்டிருக்கும் பகிரப்பட்ட பாதைகளை பாதசாரிகளும் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட தனிநபர் நடமாட்டச் சாதனப் பயனர்களும் பயன்படுத்தலாம்.

வரும் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 60 கிலோ மீட்டர் கூடுதல் பாதைகளின் கட்டுமானத்தைத் தொடங்குவது தற்காலிக திட்டம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

பள்ளிகள், அக்கம்பக்க நிலையங்கள், எம்ஆர்டி நிலையங்கள் போன்ற போக்குவரத்து முனையங்கள் ஆகியவற்றுக்கான இணைப்பை மேம்படுத்த அப்பகுதிளில் ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் 20 கிலோ மீட்டர் சைக்கிள் பாதைகளுடன் கூடுதலாக, புதிய பாதைகள் அமையும். அந்த 20 கிலோ மீட்டர் பாதைகள் 2025ஆம் ஆண்டு டிசம்பரில் கட்டி முடிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள், 2030ஆம் ஆண்டுக்குள் தயாராகவிருக்கும் சிங்கப்பூரின் மத்திய வட்டாரப் பகுதியில் அமையவுள்ள மொத்தம் 150 கிலோமீட்டர் சைக்கிள் பாதைகளுக்கு பங்களிக்கும்.

நாடு முழுவதும் தற்போது 660 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு சைக்கிள் பாதைகளும் பூங்கா இணைப்புப் பாதைகளும் உள்ளன. 2030ஆம் ஆண்டில், தீவு முழுவதும் இந்தக் கட்டமைப்பு ஏறக்குறைய 1,300 கிலோ மீட்டர் நீளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 10 வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பாளர்களில் எட்டு பேர், அருகிலுள்ள சைக்கிள் பாதையிலிருந்து சில நிமிட தூரத்திலேயே இருப்பார்கள்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அண்மை ஒப்பந்தப்புள்ளியின்படி, புக்கிட் மேராவில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்பு வட்டாரத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கி 23 கிலோ மீட்டர் சைக்கிள் பாதைகள் கட்டப்படும்.

ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களின்படி, ஜாலான் புக்கிட் மேரா, தியோங் பாரு ரோடு, லோவர் டெல்டா ரோடு, அலெக்சிண்ட்ரா சாலை நெடுகிலும், ஹோய் ஃபாட் சாலை, லெங்கோக் பஹ்ரு, ரெட்ஹில் க்ளோஸ், தெலுக் பிளாங்கா ஹைட்ஸில் உள்ள குடியிருப்பு வட்டாரம் ஆகியவை இதில் அடங்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

புக்கிட் தீமாவில், சைக்கிள் பாதைக் கட்டமைப்பு 11 கிலோ மீட்டர் விரிவடையும்.

ஒரு புதிய சைக்கிள் பாதை, ஜாலான் அனாக் புக்கிட் முதல் ஃபேரர் மேம்பாலக் வரை டனர்னன் ரோடு நீளத்தை உள்ளடக்கி அமையும். இது,தெற்கு நோக்கி ஃபேரர் ரோட்டில், லீடன் ஹைட்ஸ் வரை நீடிக்கும்.

ஃபேரர் மேம்பாலம், லூயிஸ் ரோடு ஆகிய பகுதிகளுக்கும்; ஸ்டீவன்ஸ் ரோடு, பால்மோரல் ரோடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள பகுதிகளை உள்ளடக்கி புக்கிட் தீமா ரோட்டிலும் புதிய சைக்கிள் பாதைகள் கட்டப்படும்.

ஓவியரின் கைவண்ணத்தில் நகரப் பகுதியில் தேசிய அரும்பொருளகம் அருகே, ஸ்டாம்ஃபோர்ட் சாலையில் அமையவுள்ள சைக்கிள் பாதை. 

படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்
ஓவியரின் கைவண்ணத்தில் நகரப் பகுதியில் தேசிய அரும்பொருளகம் அருகே, ஸ்டாம்ஃபோர்ட் சாலையில் அமையவுள்ள சைக்கிள் பாதை. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம் -

நகர மையத்திற்குள், தங்ளின், ஆர்ச்சர்ட் புலவார்ட், கேவனா ரோடு, செலகி, பீச் ரோடு, ராஃபிள்ஸ் புலவார்ட், ரிபப்ளிக் புலவார்ட் ஆகிய பகுதிகளிலும், தெலுக் ஆயர், ஆன்சன், கெப்பல் ஆகிய பகுதிகளிலும் புதிய சைக்கிள் பாதைகள் அமைக்கப்படும். இவை மொத்த சைக்கிள் பாதையில் 16 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும்.

காலாங் பகுதியில், காலாங் பாரு, டெசென்சோன் ரோடு, தஞ்சோங் ரூ போன்ற இடங்களில் 11 கிலோ மீட்டர் சைக்கிள் பாதைகள் சேர்க்கப்படும்.

கடந்த ஈராண்டுகளில்,நிலப் போக்குவரத்து ஆணையம் சைக்கிள் பாதை கட்டுமானத்திற்கான பல ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்ள்ளது. இது கட்டுமானத்தை விரைவாக்குகிறது..

மேற்கில், ஜூரோங் வெஸ்ட், புக்கிட் பாத்தோக், கிளமெண்டி போன்ற இடங்களில் ஏறக்குறைய 34 கிலோ மீட்டர் புதிய சைக்கிள் பாதைகள் கட்டுமானத்தில் உள்ளன.

ஆக அண்மையில், ஆகஸ்ட் மாதம் கிழக்கு, வடகிழக்கில் உள்ள ஏழு நகர்களிலும், சின் மிங், பிடோக், பாசிர் ரிஸ், தெம்பனிஸ் ஆகிய இடங்களில் உள்ள தொழில் பேட்டைகளிலும் 87 கிலோ மீட்டர் புதிய சைக்கிள் பாதைகளை அமைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் ஒப்பந்தப் புள்ளிகளுக்கான அழைப்பை விடுத்தது. கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்