அண்மையில் புக்கிட் மேரா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடத்தின் நான்காவது மாடி வீட்டில் தீ மூண்டது.
இந்தத் தீச்சம்பவம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) மாலை 4 மணி அளவில் புளோக் 106 புக்கிட் மேராவில் நிகழ்ந்தது.
அந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மாண்டோரில் 34 வயது ஆடவரும் 32 வயது பெண்ணும் அடங்குவர். அந்த இருவரும் உதவி கேட்டு சன்னல் வழியாக உரக்க கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிறகு அவர்கள் அவ்வீட்டின் சமையலறையில் சுயநினைவின்றிக் கிடந்தனர். இருவரும் மருத்துவமனையில் மாண்டனர்.
இவர்களுடன் சேர்த்து இவ்வாண்டில் இதுவரை எட்டுப் பேர் தீச்சம்பவத்தில் மாண்டுவிட்டனர்.
2023, 2024ஆம் ஆண்டுகளைவிட இது அதிகம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
புக்கிட் மேரா வீட்டில் நிகழ்ந்த தீச்சம்பவம் காரணமாக நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் மின்கலன் தீப்பிடித்து எரிந்ததே தீச்சம்பத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் தற்காலிக வசிப்பிடத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சேதமடைந்த நான்காவது மாடியின் மறுசீரமைப்புப் பணிகளை காவல்துறை அதிகாரிகள், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் தொடங்கிவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.