தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தண்டவாளத்தில் ஆடவர் விழுந்ததால் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டியில் சேவைத் தடை

1 mins read
ab9c65ac-1d67-4feb-92ea-f6f72f335266
அக்டோபர் 27ஆம் தேதி, இரவு 11.35 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி நிலையத்தில் சம்பவம் நடந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மதுபோதையில் பயணி ஒருவர் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் அக்டோபர் 27ஆம் தேதியன்று இரவு 11.35 மணியளவில் தவறி விழுந்தார்.

உடனடியாக அந்த நிலையத்தின் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு, ஆடவர் தண்டவாளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார். கடைசி ரயில் 11.41 மணிக்குப் புறப்படுவதற்கு சற்று முன்னதாக இது நடந்துள்ளது.

இதன் விவரங்களை எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தது.

ரயில் நிலையப் பணியாளர்கள், அவசரகாலத்தில் மட்டும் ரயிலை நிறுத்தப் பயன்படும் கருவியை செயல்படுத்தி மின்சார விநியோகத்தை தண்டவாளங்களில் இயங்காமல் தடுத்தனர் என்று எஸ்எம்ஆர்டி ரயில் சேவைகளின் தலைவர் லாம் ஷியாவ் காய் விளக்கினார்.

ரயில் செயல்பாடுகளுக்கான கட்டுப்பாட்டு மையம், அந்தப் பகுதிகளுக்கான ரயில் சேவைகளை தடுத்து நிறுத்தியது. அதனால் அந்தப் பயணி, ரயிலில் மோதப்படுவது தவிர்க்கப்பட்டது. தவறி விழுந்த ஆடவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது சட்டவிரோதமானது, பொறுப்பற்றது, பாதுகாப்புக்கு பெரும் அபாயங்களை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த சம்பவத்தை எஸ்எம்ஆர்டி நிறுவனம் கடுமையாக எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு நடந்துகொள்வோர் தங்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி, ரயில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர் என்று திரு லாம் கூறினார்.

காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்