புக்கிட் பாஞ்சாங் பிளாசா கடைத்தொகுதியை $428 மில்லியனுக்கு விற்பனை செய்ய கேப்பிட்டாலேண்ட் ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக அறக்கட்டளை இணக்கம் தெரிவித்திருப்பதாக புதன்கிழமையன்று (ஜனவரி 14) தெரிவிக்கப்பட்டது.
கடைத்தொகுதியை வாங்குபவரின் அடையாளத்தை கடைத்தொகுதியின் நிர்வாகம் வெளியிடவில்லை.
இருப்பினும், புக்கிட் பாஞ்சாங் பிளாசா கடைத்தொகுதியை அமெரிக்க சொத்து நிர்வாக நிறுவனம் ஹைன்ஸ் கொள்முதல் செய்வதாக நிலச் சொத்து செய்தித் தளமான மிங்டியாண்டி தெரிவித்துள்ளது. கேப்பிட்டாலேண்ட் ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக அறக்கட்டளை சார்பாக ஜேஎல்எல் நிலச் சொத்து சேவைகள் நிறுவனம் வர்த்தக உடன்பாட்டை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
புக்கிட் பாஞ்சாங் பிளாசா கடைத்தொகுதியின் விற்பனையில் 90 நிலப் பட்டாக்களின் விற்பனையும் அடங்கும். அத்துடன் கடைத்தொகுதியில் உள்ள ஆலை ஒன்றும் அதில் உள்ள இயந்திரவியல், மின்சாரக் கருவிகளும் விற்கப்படுகின்றன.
இந்த விற்பனை கேப்பிட்டாலேண்ட் ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக அறக்கட்டளை அதன் ஆற்றலை முழுமையாக அடைய வகை செய்யும் என்றும் வளர்ச்சிக்காக நிதி நீக்குப்போக்குத் தன்மையை வலுப்படுத்தும் என்றும் பங்குதாரர்களுக்கான மதிப்பை உருவாக்கும் என்றும் கடைத்தொகுதி நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான திரு டான் சூன் சியாங் தெரிவித்தார்.

