தேசிய தினத்தன்று புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் ஒரு குடும்பம், தங்களது வீவக வீட்டிற்கு வெளியிலுள்ள பொது நடைவெளியில் உணவு வாட்டியது (Barbecue).
அதனால் கிளம்பிய கடுமையான நெடி தாங்காமல் அண்டைவீட்டார் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இச்சம்பவம் ஃபாஜார் ரோடு, புளோக் 443Dயில் இரவு 7.30 மணியளவில் நிகழ்ந்ததாக ஷின்மின் செய்தி தெரிவித்தது.
தங்களது வீட்டிற்கு முன்பே அவர்கள் உணவு வாட்டியபோதும், அதன்மூலம் கிளம்பிய புகையும் நெடியும் அண்டை வீடுகளுக்கும் பரவின.
“உணவு வாட்டியதால் கிளம்பிய புகையால், ஏற்கெனவே துவைத்து உலரப் போட்டிருந்த துணிகளை மீண்டும் துவைக்க வேண்டியதாயிற்று,” என்றார் புகாரளித்த குடியிருப்பாளர்.
அக்குடும்பத்தினர் இப்படி வீட்டிற்கு வெளியே உணவு வாட்டியது இது முதன்முறையன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரவு 8 மணியளவில் அவ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் இன்னொருவர், “ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள உணவு வாட்டும் பகுதியானது இங்கிருந்து அதிகத் தொலைவில் இல்லை. உணவு வாட்டி உண்ண விரும்பினால், அங்கு செல்வது குறித்துப் பரிசீலிக்கலாம். அது பாதுகாப்பானது,” என்று சொன்னதாக ஷின் மின் செய்தி கூறியது.
தொடர்புடைய செய்திகள்
எப்போதாவது ஒருமுறை உணவு வாட்டினால் ஏற்றுக்கொள்ளலாம் என்றார் இன்னொரு குடியிருப்பாளர்.

