வெள்ள அபாயம் கொண்ட புக்கிட் தீமா பகுதியில், கால்வாய் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், ஆண்டு இறுதியில் வரவிருக்கும் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது.
தேசிய நீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) வெளியிட்ட அறிவிப்பில், அப்பகுதியில் உள்ள 2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாயின் கடைசி 900 மீட்டர் பகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்தக் கால்வாய், முன்னர் இருந்ததைவிட 30 விழுக்காடு கூடுதல் வெள்ளநீரைத் தாங்கும் திறன் கொண்டது. இது, கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டு வந்த திடீர் வெள்ள பாதிப்புகளைக் குறைக்க உதவியுள்ளது.
இந்தப் பகுதியை மேம்படுத்தும் பணிகள் 2019ல் தொடங்கின. இவை 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் நிறைவடையும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பாதிப்பைக் குறைப்பதற்காகக் கட்டுமான அட்டவணையில் செய்யப்பட்ட மாற்றங்கள், பிற காரணங்களால் இந்தப் பணிகள் தாமதமடைந்தன.
இருப்பினும், புக்கிட் தீமா பகுதி தாழ்வான, பள்ளத்தாக்கு போன்ற நிலப்பரப்பைக் கொண்டிருப்பதாலும், பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு முறையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற மாற்றங்களாலும், வடிகால் கட்டமைப்புகளை மட்டும் கொண்டு திடீர் வெள்ளத்தை முழுமையாகத் தடுக்க முடியாது என்று பியுபி எச்சரித்துள்ளது.
நிலப்பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில் கூடுதல் வடிகால்களை அமைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்பதையும் பியுபி சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கெனவே புக்கிட் தீமா பகுதி முழுவதும் மொத்தம் 10 கி.மீ. நீளமுள்ள மூன்று வடிகால் கால்வாய்கள் மூலம் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
புக்கிட் தீமா பகுதி சிங்கப்பூரின் ‘மிகவும் சவாலான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்’ ஒன்றாகும் என்பதை ஒப்புக்கொண்ட பியுபியின் வெள்ளத் தடுப்புத் துறைக்கான துணைத் தலைமை நிர்வாகி ஏஞ்சலா கோ, மிகக் கடுமையான புயல்களால்கூட வடிகால் உள்கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யமுடியும் என்று கூறினார்.
அக்டோபர் 23ஆம் தேதியன்று, ‘ரைபில் ரேஞ்ச்’ ரோடு முதல் ‘ஜாலான் கம்போங் சந்தேக்’ வரை செல்லும் கால்வாயின் இறுதி 900 மீட்டர் பகுதி, அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளதாக பியுபி அறிவித்தது.
சுமார் $60 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளின் இறுதி கட்டம், 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. முன்பு கோண வடிவில் இருந்த இந்தக் கால்வாய், தற்போது ‘U’ வடிவ வடிகாலாகவும், பெட்டி வடிவிலான நீர்வழிப் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், முன்னதாக இருந்ததை விட 30 விழுக்காடு கூடுதல் மழைநீரை இது கொண்டு செல்ல முடியும் என்று பியுபி தெரிவித்துள்ளது.
