பள்ளிகளில் பகடிவதை மேலும் நன்கு கையாளப்படலாம்: டெஸ்மண்ட் லீ

2 mins read
c7bcf212-b2ac-49e7-8c05-2c62b2bc22c1
கல்வி அமைச்சு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிகளில் பகடிவதை கையாளப்படுவது மேம்படுத்தப்படலாம் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

குறிப்பாக, பகடிவதை விவகாரங்களில் முதலில் தகவல்களை சேகரிப்பதற்காகப் பள்ளிகள் பெற்றோரிடம் தெரியப்படுத்துவதைத் தள்ளிப்போடும் சூழல்களுக்கு இது பொருந்தும் என்று அவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) குறிப்பிட்டார்.

மனத்தைப் புண்படுத்தும் எந்தச் செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, தவறானது என்று அவர் சுட்டினார். நம்பிக்கையை வளர்க்க பெற்றோரும் பள்ளிகளும் இணைந்து செய்லபடவேண்டும் என்றும் அவர் கூறினார்.

பள்ளிகளில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களை மேலும் நன்கு கையாளும் நோக்கில் கல்வி அமைச்சு இவ்வாண்டு முதல் மறுபரிசீலனை செய்துவருகிறது. பெற்றோரிடம் நேரத்துக்குத் தெளிவான தகவல்களை வெளியிடும் நடவடிக்கை மேம்படுத்தப்படவேண்டும் என்பது அதில் தெரியவந்தது.

புவன விஸ்தாவில் உள்ள கல்வி அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற கலைந்துரையாடலுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திரு லீ, பள்ளிகளில் பகடிவதையைக் கையாள்வதன் தொடர்பில் அமைச்சு நான்கு அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார். பள்ளிக் கலாசாரத்தையும் நடைமுறைகளையும் மேம்படுத்துவது, மாணவர்களுக்குப் பண்புகள் சார்ந்த கல்வியைப் புகட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்துவது, ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்களை ஆதரவளிப்பது, பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது ஆகியவை அந்த நான்கு அம்சங்கள்.

மாணவர்களுக்குப் பாதுகாப்பான, ஆதரவாக இருக்கும் சூழலை உருவாக்கித் தருவதில் பள்ளிகள் தொடர்ந்து ஈடுபடுவது முக்கியம் என்றார் மூத்த மனநல மருத்துவர் பி. புவனேஸ்வரி.

பகடிவதைக்கு ஆளாகும் மாணவர்களிடையே பாதிப்பு மிக மோசமாக இருக்கலாம் என்றும் பாதிப்பு நீண்டகாலத்துக்குத் தொடரக்கூடும் என்றும் அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் மனப்பதற்றறத்துக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாவதாக அவர் சொன்னார்.

“சில மாணவர்களிடம், பள்ளியில் போதிய பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்படலாம். அதனால் அவர்கள் பள்ளிக்குப் போவதைத் தவிர்க்கலாம், போக மறுக்கலாம். மோசமான பகடிவதைக்கு ஆளாவோர் தங்களைக் காயப்படுத்திக்கொள்வது அல்லது உயிரை மாய்த்துக்கொள்வது பற்றி யோசிக்கக்கூடும். சில வேளைகளில் பகடிவதைக்கு ஆளாபவர் வன்மையாக நடந்துகொள்ளலாம் அல்லது வன்முறையில் ஈடுபடக்கூடும். அதுபோன்ற செயல்கள், பாதிக்கப்பட்டவரின் பதிலடி தரும் வழிமுறையாகவோ உதவி கேட்டு எழுப்பும் குரலாகவோ இருக்கும்,” என்றார் பிராமிசஸ் ஹெல்த்கேர் (Promises Healthcare) மனநலச் சேவை மருந்தகத்தின் டாக்டர் புவனேஸ்வரி தெரிவித்தார்.

பகடிவதையைக் கையாள வீட்டிலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மூத்த சமூக ஊழியர் ராமசாமி கணேசன் தமிழ் முரசிடம் கருத்துரைத்தார். பகடிவதைக்கு ஆளாகும் பிள்ளைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வீடு தோதான இடமாக இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“பகடிவதைக்கு ஆளாவது பிள்ளைகளின் தவறல்ல என்று பெற்றோர் அவர்களுக்குப் புரிய வைத்து ஆறுதலாக இருக்கவேண்டும். பிள்ளைகளின் தன்மதிப்பை மறுவுறுதிப்படுத்தி அவர்களுக்குத் தாங்கள் என்றும் ஆதரவாக இருப்போம் என்பதைக் குடும்பத்தார் வலியுறுத்தவேண்டும். நிலைமையைச் சமாளிக்கும் முறைகளை வளர்க்க உதவிக்கரம் நீட்டி, உணர்வுகளைக் கையாளும் ஆக்கபூர்வமான உத்திகளை அவர்களுக்குக் கற்றுத் தரவேண்டும்,” என்றார் பள்ளிகள், சமுதாய, குடும்ப, மேம்பாட்டு அமைச்சின் மறுவாழ்வுச் சேவைகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியிருக்கும் திரு கணேசன்.

கூடுதல் செய்தி: பிரசன்னா கிரு‌ஷ்ணன்
குறிப்புச் சொற்கள்