பீச் ரோட்டில் உள்ள கோல்டன் மைல் டவர் வர்த்தகக் கட்டடத்தின் உயர்மாடி கார்நிறுத்தத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) பல்வேறு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அதன் காரணமாக, அந்தக் கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியானது.
தீ விபத்தில் சிக்கிய வாகனங்களில் மின்சார வாகனம் எதுவுமில்லை என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பிற்பகல் 1 மணிக்கு முன்னதாக, அந்தத் தீச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அது தெரிவித்தது.
தீ எரிவதைக் காட்டும் காணொளி ஒன்றை அந்தக் கட்டடத்தில் இயங்கும் ‘த புரொஜெக்டர்’ என்னும் திரையரங்க நிறுவனம் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டது. வாகனங்கள் தீக்கிரையாவதை அந்தக் காணொளியில் காணமுடிந்தது.
தீப்பிழம்பு வெளியான ஒரு வாகனத்தில் இருந்து வெடிப்புச் சத்தம் ஒன்றும் அந்தக் காணொளி வாயிலாகக் கேட்டது. அந்தத் திரையங்கில் சனிக்கிழமை இடம்பெற வேண்டிய காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கட்டடத்தில் இருந்த 45 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மூவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டபோதும் அவர்கள் மருத்துவமனை செல்ல மறுத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.