திடீரென உடைந்த குழாய்; புதுப்பிக்கப்பட்ட வீட்டில் சேறு

2 mins read
2e0b17a4-5ea2-4fd4-b14c-ad6849eb0fbf
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரண்டு மாதங்களுக்கும் மேல் நீடித்த புதுப்பிப்புப் பணிகள் முடிந்து, ஒன்றிரண்டு நாளில் குடியறே இருந்த அனிதா ரஹிம் குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஈசூன் அவென்யூ 6ன் கீழ்த்தளத்தில் உள்ள தமது புதுப்பிக்கப்பட்ட நான்கறை வீட்டை திருமதி அனிதா, 45, தமது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் நேற்று சென்று பார்த்தார்.

இரண்டு நாளில் குடியேற இருப்பதால் இன்னும் ஏதும் செய்யப்பட வேண்டிய வேலை உள்ளதா என்று அந்தக் குடும்பத்தினர் வீட்டை சுற்றிச் பார்த்துக்கொண்டு இருந்தபோது திடீரென சேறும் சகதியும் வடிந்ததைக் கண்டனர்.

சமையலறையிலும் கழிவறையிலும் இருந்து பிற்பகல் 1 மணியளவில் பெரும் தண்ணீர் சத்தம் கேட்டதாகக் கூறிய திருமதி அனிதா, மழைதான் பெய்கிறதோ என்று கருதியதாகவும் ஆனால் தமது வீட்டுக்குள் குழாய் உடைந்த சத்தம்தான் அது என்று பின்னர் கண்டதாகவும் தெரிவித்தார்.

தொடக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிய சேறு கலந்த தண்ணீர் சிறிது நேரத்தில் வெள்ளம்போல வீட்டுக்குள் ஓடத் தொடங்கியதாக அவர் கூறினார். அதனால், தரைக்கற்களும் புதிதாக வாங்கிய சோஃபா, மேசை போன்ற பொருள்களும் பாழாகிவிட்டதாகவும் சேதத்தின் அளவு $80,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் திருமதி அனிதா கூறினார்.

புதுப்பித்தலுக்காகவும் புதிய பொருள்கள் வாங்கவும் ஏற்கெனவே $100,000 செலவிடப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, திங்கட்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் குழாய் உடைந்ததாக அந்த வீட்டில் இருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது. அவசர பழுதுபார்ப்புக்கு சேவை ஊழியர்களும் குத்தகையாளரும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக கழகத்தின் பேச்சாளர் கூறினார்.

பழுதுபார்ப்புப் பணி காரணமாக கீழ்த்தளங்களில் உள்ள 20 வீடுகளுக்கான தண்ணீர் விநியோகம் தடை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மாலை 4 மணியளவில் சேற்று நீர் நின்றதாக திருமதி அனிதா கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வீடுகட்டுமானம்

தொடர்புடைய செய்திகள்