சாங்கி விமான நிலையத்தில் பேருந்து விபத்து: அதிகாரிக்குச் சிறை

சாங்கி விமான நிலையத்தில் பேருந்து விபத்து: அதிகாரிக்குச் சிறை

படம்: SCREENGRAB FROM SG ROAD VIGILANTE/FACEBOOK

25 Nov 2026 - 4:01 pm

2 mins read

சாங்கி விமான நிலையத்தில் பணியில் இருந்த துணைக்காவல் அதிகாரி, தவறுதலாகத் தீவிரவாதத்துக்கு எதிரான வாகனத் தடுப்பு இயந்திரத்தை இயக்கிவிட்டதால் பேருந்து அதில் மோதி பலர் காயமுற்றனர்.

அந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு எட்டு வாரங்கள் சிறைத்தண்டனை புதன்கிழமை (நவம்பர் 25) விதிக்கப்பட்டது.

விபத்தில் 22 பேர் காயமடைந்ததோடு ஓட்டுநரின் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த பஸ் வாகனமும் பெருஞ்சேதமுற்று அது பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது.

கவனமற்ற செயலால் படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை அஸ்ஃபர் முஸ்டகிம் ஜஸ்மன் என்ற அந்த 26 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2024 மே 21ஆம் தேதி நடந்த சம்பவத்தன்று அவர் சாங்கி விமான நிலைய முனையம் மூன்றின் அந்த ஏடிவிபி எனப்படும் பாதுகாப்பு இயந்திரத்தை செயல்படுத்தும் பணியில் இருந்தார்.

பஸ் ஓட்டுநர் 858 எண் கொண்ட பஸ்ஸை ஓட்டியபடி விமான நிலைய பேருந்து முனையத்தில் பகல் 12.45 மணியளவில் வந்தடைந்தார்.

அஸாரின் சக அதிகாரி அப்பேருந்தில் வழக்கமான சோதனைகளை மேற்கொண்ட பிறகு அது கடந்து செல்லலாம் என்று அவரிடம் சமிக்ஞை காட்டினார்.

அப்போது பேருந்தை முன்செல்லாமல் தடுத்து வைக்கப்பட்ட தடுப்பு, உயர்த்தப்பட்டு பஸ் முன்சென்றது.

அச்சமயத்தில் அஸார் கவனமின்றி அவரது இடது கரம் கட்டுப்பாட்டுக் கருவியின்மீது படும்விதமாக அதன்மீது சாய்ந்தார். அதில் இருந்த உணர்பொத்தான் அழுத்தப்பட்டு, சாலையில் தரையில் இருந்த ஏடிவிபி என்ற தீவிரவாத தடுப்புக்கான வாகன தடுப்பு இயந்திரம் செயல்படுத்தப்பட்டது. அதனால் பஸ் அதன்மீது மோதி பலரைக் காயப்படுத்தியது.

அந்த இயந்திரச் செயல்பாட்டு நடைமுறையின்படி (எஸ்ஓபி) அதனைத் தேவையின்றி நெருங்கவோ, செயல்படுத்தவோ அனுமதியில்லை. அஸார் அதன் செயல்முறைகள் குறித்த பயிற்சிகளை முறையாகப் பெற்று அவற்றை நன்கு அறிந்தவர்.

விபத்து நடந்த நேரத்தில் அவரது கவனம் பேருந்து கடந்து செல்வதன்மீது இருந்ததே தவிற, அந்த ஏவிடிபி இயந்திரக் கருவிமீது இல்லை என்று அங்கிருந்த கண்காணிப்புத் தொலைக்காட்சியில் தெரிந்தது. அது அவ்வியந்திர இயக்கத்தின் எஸ்ஓபி வழிகாட்டுதலுக்கு எதிரான செயலாகும். ஓட்டுநர் உட்பட காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூக்கில் காயமடைந்த ஓட்டுநருக்கு ஏழு நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

சாலையில் தவறாகச் செயல்படுத்தப்பட்டு பாதிப்படைந்த இயந்திரத்தை சீர் செய்ய சாங்கி விமான நிலையக் குழுமத்துக்கு $55,000க்கும் மேற்பட்ட செலவானது. போக்குவரத்துக்கு தகுதியிழந்த பேருந்தின் இழப்பு $236,000 என்று மதிப்பிடப்பட்டது.

தேசிய உட்கட்டமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு வகிக்கும் அதிகாரியான அஸார் அதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டார் என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்