தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, சிங்கப்பூரர்கள் ஐவர் காயம்

2 mins read
ec7cd0d3-6376-499d-aa17-1aa7e0b2f054
இச்சம்பவம் சனிக்கிழமை (அக்டோபர் 11) அதிகாலை நிகழ்ந்தது. - படம்: பாங்கி தீயணைப்பு, மீட்பு நிலையம்

கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

அந்த எக்ஸ்பிரஸ் பேருந்தில் இருந்த மற்ற பலர் காயமுற்றனர். அவர்களில் சிங்கப்பூரர்கள் ஐவரும் அடங்குவர்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்தது. இச்சம்பவம் சனிக்கிழமை (அக்டோபர் 11) அதிகாலை நிகழ்ந்தது.

மொத்தம் 29 பேர் இருந்த பேருந்து பூன் லேயிலிருந்து பேராக் தலைநகர் ஈப்போவுக்குச் சென்றுகொண்டிருந்தது. மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 293வது கிலோமீட்டர் பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரொன் அப்துல் யூசோஃப் சனிக்கிழமையன்று கூறினார் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

“ஓட்டுநர் உட்பட பேருந்தில் 29 பேர் இருந்தனர். அவர்களில் 24 பேர் மலேசியர்கள், ஐவர் சிங்கப்பூரர்கள்,” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பயணி ஓர் 59 வயது மலேசிய ஆடவர். அவர் சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில் வேலை செய்து வந்தார்.

பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அவர் தலையில் மோசமான காயங்களுக்கு ஆளானதால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த மற்றவர்களுக்கு சுல்தான் இட்ரிஸ் ‌ஷா செர்டாங், தெங்கு பெர்மாய்சுரி நொரா‌ஷிக்கின் காஜாங், புத்ரஜெயா, சைபர்ஜெயா, துவாங்கு ஜா’பர் செரெம்பான் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாண்ட பயணி, சம்பவ இடத்தில் சிக்கிக்கொண்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவு துணை இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் சனிக்கிழமையன்று கூறினார் என்று ஃபிரீ மலேசியா டுடே ஊடகம் தெரிவித்தது. மீட்புப் பணியாளர்கள் வந்தடைவதற்கு முன்னரே மூவர் பேருந்திலிருந்து வெளியேறியதாக திரு அகமது குறிப்பிட்டார்.

ஓட்டுநர் கவனமின்றி ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை துணை ஆணையர் நாஸ்ரொன் தெரிவித்தார். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, 50,000 ரிங்கிட் (15,360 வெள்ளி) அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம். குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்