பொங்கோலில் புதன்கிழமை (மார்ச் 19) பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற 82 வயது நடையர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சுமாங் வாக், சுமாங் லிங்க் சந்திப்பில் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து மாலை 4 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. விபத்து குறித்த விசாரணைக்கு பேருந்தை ஓட்டிய 53 வயது ஆடவர் உதவி வருவதாகக் காவல்துறை சொன்னது.
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளியில், பேருந்தின் முன்பகுதிக்குப் பக்கத்தில் முதிய ஆடவர் ஒருவர் சாலையில் விழுந்து கிடப்பது தெரிந்தது. அவருக்குப் பக்கத்தில் இரு குடைகளை வைத்து அவருக்கு நிழல் கொடுத்த இருவர், அவருக்கு உதவுவதும் தெரிந்தது.
விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்துச் சேவை எண் 382G, கோ-அஹேட் சிங்கப்பூர் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த அந்நிறுவனப் பேச்சாளர், விசாரணை நடைபெற்றுவரும் வேளையில், விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“விபத்தில் காயமுற்ற நடையரின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு ஆதரவும் உதவியும் வழங்க நாங்கள் முற்படுகிறோம். எங்களைத் தொடர்புகொள்ளும்படி அவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் அப்பேச்சாளர்.