தெம்பனிசில் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) காலை நிகழ்ந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த எட்டுப் பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும், இந்த விபத்து குறித்து காலை 11.05 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தன.
தெம்பனிஸ் கான்கோர்ஸ், தெம்பனிஸ் சென்ட்ரல் 8 சந்திப்பில் அந்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து சறுக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
19 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்ட அந்த எட்டுப் பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
அவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த விபத்து தொடர்பில் 44 வயதுப் பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
‘எஸ்ஜிஆர்வி ஃபிரன்ட் மேன்’ ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்ட புகைப்படங்கள், சாலைத் தடுப்புக்குப் பக்கத்தில் நிற்கும் அந்தப் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்திருப்பதைக் காட்டின.